பயன்பாட்டுத் தமிழ்

Saturday, September 24, 2005

பெயர்ச்சொல் எழுத்துக்கூட்டலில் சீர்மை

செம்மொழியாகவே இருந்தது, இருப்பது, இருக்கப்போவது தமிழ்.
ஏற்புத் தகுதியால் அரசுக்குப் பெருமை சேர்த்துளது தமிழ். நிதியை அரசு ஒதுக்கலாம்; விருதுகள் வழங்கலாம்; புலமையாளரை ஊக்குவிக்கலாம்; பல்கலைக் கழகங்களில் பீடங்கள் அமைக்கலாம்; தமிழ் ஆண்டைக் கொண்டாடலாம்; இதனால் தமிழுக்கும் தமிழருக்கும் அரசுக்கும் உள்ள நெருக்கம் அதிகரிக்கலாம்.
செம்மொழி ஏற்பாணையின் செயல்பாடுகள் வளரும் பயிருக்கு உரமூட்டுவதாக அமையவேண்டும். தொடர்புக்கு வாகனமாக, வளர்ச்சிக்குக் கருவியாகச் செம்மொழித் தமிழ் தொடர வேண்டும்.
மாற்றங்களை உள்ளடக்கும் வரம்புகளைக் காலத்துக் காலம் அமைந்து வந்தமையால்தான், வாழும் மொழியாக, தமிழரை வளப்படுத்தும் மொழியாக இன்றும் தமிழ் உளது.
உலகம் முன்னெப்பொழுதும் இல்லாதளவு சுருங்கி, தொடர்புகள் நெருக்கமாகி, இணைப்புகள் எளிதானதாகி வருகின்றன. எவர் சற்றே அயர்ந்தாலும், அவரை அயர விட்டுவிட்டு மற்றவர் முன்னேறிவிடுகின்ற அளவுக்கு, அறிவியலிலும் தொழினுட்பத்திலும் வேகமான மாற்றங்கள், மனித இனத்தை அழைத்துச் செல்கின்றன.
விழிப்புள்ள சமுதாயமாக நாம் இல்லாவிடில் தமிழரின் வளர்ச்சிக்குத் தமிழ் பயன்படாது போய்விடும்.
வளர்ச்சிக்குப் பயனற்ற ஒன்றை எந்தச் சமூகம் தொடர்ந்து தாங்கிக் கொள்ளும்? உணர்வுகளும் உள்ளமும் ஈடுபட்டாலும் வயிற்றை நிரப்பாவிடின் தமிழுக்கு வாழ்வு நீடிக்குமா?
தொடர்புக்குரிய காலமிது; இணைப்புக்குரிய காலமிது. இணைப்புக்கும் தொடர்புக்கும் உரிய முதற் கருவி மொழி; மொழியைக் கொண்டு செல்வன மின் கருவிகள். மொழியில்லையேல் மின் கருவிகளால் பயனென்?
அற்ற மொழிகள் சிலவற்றைச் செம்மொழிகளாக அரசு ஏற்ற காலத்தில், வாழும் மொழியான தமிழையும் செம்மொழியாக ஏற்ற அரசு, தமிழின் வளர்ச்சிக்கு உரிய நிதி, நடைமுறை மற்றும் பாராட்டு உந்துதல்களை வழங்கவேண்டும்.
அந்த உந்துதல்களுள் ஒன்றாகப் பெயர்ச்சொல் எழுத்துக் கூட்டலில் சீர்மையை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவருவதுடன், தொடர்ச்சியாகப் புது வரவுகளுக்கான சீர்மையை வகுத்துக்கொண்டே வருகின்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.
பிறமொழிகள் தொடர்பான எடுத்துக் காட்டுகளை இங்கு கூறுவது என் கடன்.
1. வானத்தில் உள்ள நாள்களுக்கும் கோள்களுக்கும் பெயர்களுண்டு. வானத்தில் எண்ணிக்கையற்ற விண்மீன்கள் உள. இவற்றுக்குரிய பெயர்களைச் சீரான எழுத்துக்கூட்டலில் அமைக்க அனைத்துலகக் குழு ஒன்று உண்டு. உரோம வரிவடிவங்களில் அமைந்த அப் பெயர்களை இலத்தீன் சார் மொழிகள் அனைத்தும் பொதுப் பெயராகக் கொள்கின்றன. புதிதாத ஒரு விண் மீனை ஒருவர் கண்டறிந்தால் அதற்கு அவர் எழுந்தமானமாக எந்தப் பெயரையும் சூட்ட முடியாது. முதலில் அந்த விண் மீனுக்கு ஓர் எண்ணைக் கொடுப்பார். அந்த எண்ணையும், தான் விதந்துரைக்கும் பெயரையும் அனைத்துலகக் குழுவுக்கு அனுப்புவார். அந்தக் குழு அவரது விதப்புரையை விரிவாக ஆராயும். ஏற்கனவே அதே விண்மீனுக்கு வேறு பெயருண்டா? இலக்கியங்களில் குறிப்புண்டா என ஆராயும். பின்னர் அந்த விண்மீனுக்கு ஒரு பெயரைச் சூட்டும். அதையே அவ்விண்மீனுக்குரிய அனைத்துலகப் பெயராக இலத்தீன் சார் மொழிகள் ஏற்றுக்கொள்ளும்.
2. தாவரங்கள், விலங்குகளுக்குப் பெயர்கள் ஊருக்கு ஊர், வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும். யாழ்ப்பாணத்தின் நுளம்பு சென்னையில் கொசு எனப் பெயர் பெறும். கடந்த நூற்றாண்டில் இந்தச் சிக்கலை இலத்தீன் சார் மொழிகளைப் பேசும் அறிவியலாளர் உணர்ந்தனர். ஆராய்ச்சி முடிவுகளைக் கூறுவதில் குழப்பங்கள் நீடித்தன. ஒருவர் கூறியதை மற்றவரால் புரிந்து கொள்ள முடியவில்லை; இத்தனைக்கும் ஒரே வகை விலங்கை இருவரும் ஆய்ந்த காலம். வட்டார, மொழிக்குழு வேறுபாடுகளுக்கு அப்பால் எழுத்துக்கூட்டலில் சீர்மையுடைய இலத்தீன் பெயர்கள், அதுவும் ஒரு விலங்குக்கோ ஒரு தாவரத்துக்கோ இரு சொல் கொண்ட பெயரைச் சூட்டத் தொடங்கினர். இதற்காக அனைத்துலகக் குழுக்களை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அமைத்தனர். விலங்குப் பெயர்களுக்கான அனைத்துலகத் தராரதரக் குழு இன்றும் முறையாகச் செயற்படுகிறது. அதே போலத் தாவரப் பெயர்களுக்கான அனைத்துலகத் தராரதரக் குழு இன்றும் முறையாகச் செயற்படுகிறது. இலத்தீன் மொழி சார் நாடுகளுக்கிடையே மோதல்கள் முற்றும், போர்கள் நிகழும், ஆனாலும் இந்தத் தராதரப் பெயர்ச் சொற் குழுக்களின் செயற்பாட்டிற்கோ, நடைமுறைக்கோ பங்கம் ஏற்படாது.
3. ஊர்கள், பேரூர்கள், நகரங்கள் யாவுக்கும் பெயர்கள் உண்டு. குழப்பமற்ற எழுத்துக் கூட்டல் இருப்பதே வளர்ச்சிக்கு வழி எனக் கண்ட உலக நாடுகள், இடப் பெயர் எழுத்துக்கூட்டல் சீர்மைக்காக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பாக ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்புக்குத் தலைமையகம் ஒன்று இருப்பினும், மண்டல அமைப்பகள் பல உள. இந்த மண்டல அமைப்புகளுக்கு ஒவ்வொரு நாட்டிலும் நாட்டமைப்பு உண்டு. ஒவ்வாரு இடப்பெயரின் உரோம வரிவடிவ எழுத்துக்கூட்டல் இதுதான் என அறிவிப்பது இந்த அமைப்பின் பணிகளுள் ஒன்று. பெயர்களை மாற்றும் உரிமை உள்ளூர் மக்களுக்கே உண்டு என்பதை ஏற்கும் இவ்வமைப்பு, அவ்வவ் ஊர்களின் உரோம வரிவடிவ எழுத்துக்கூட்டல் எப்படி அமையும் என்பதை அவ்வவ் மக்களிடம் கேட்டு உறுதி செய்து, அவர்களுக்கும் உலகுக்கும் அறிவிக்கும் மாபெரும் பணியைச் செய்து வருகிறது.
எங்கெல்லாம் பெயர்ச்சொல்லின் எழுத்துக்கூட்டல் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதோ அங்கெல்லாம் தராதரக் குழுக்களை அமைத்தலும், சீர்மையான பெயர்ச் சொல்லை அமைத்தலும் வளரும் நாடுகளின் போக்காக உள்ளன. இன்று நேற்றல்ல, கடந்த நூறாண்டுகளுக்கு மேலாகவே இந்தப் போக்கு, இலத்தீன் மொழி சார் நாடுகளிடையே உண்டு.
யப்பானியரின் தொழினுட்ப அறிவியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் யப்பானிய மொழியே. ஐரோப்பாவின் அறிவியல் கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் யப்பானிலும் மீட்டுருவாக்கினர். ஒவ்வொரு பொறியையும் யப்பானியரே இரட்டிக்கத் தொடங்கினர். இதற்காக ஐரோப்பிய அறிவியல் - தொழினுட்ப அறிக்கைகளை யப்பானிய மொழிக்கு மாற்றினர். உடனுக்குடன் மாற்றுவதற்காக துறைதொறும் அமைப்புகளை உருவாக்கினர். அத்தைகைய அமைப்புகளுள் ஒன்றே பெயர்ச் சொல் எழுத்துக்கூட்டலில் சீர்மை அமைப்பு.
கொரியா, சீனம் போன்ற ஆசிய நாடுகள் தத்தம் மொழிகளிலே வளர்ச்சி அடையப் பெயர்ச்சொல் எழுத்துக்கூட்டலில் சீர்மை அமைப்புகளை உருவாக்கி வளர்ந்து வருகின்றனர்.
அற்ற மொழிகள் இத்தகைய வரப்புக் கட்டுகளை அமைக்காததாலன்றோ அற்றன. வளரும் மொழிகள் இத்தகைய வரப்புக் கட்டுகளை அமைத்ததால், தொடர்ந்தும் அமைத்து வருவதால் செழிப்புற்று, உலகளாவி வளர்வதுடன், அயர்ந்த நிலையிலுள்ள மொழிகளையும் அற்ற மொழிகளாக்க முனைகின்றன. தமிழர் இந்த வரப்புக் கட்டுதலை எடுத்துநோக்காது அயர்ந்துளர். வளரும் மொழிகள் ஒருநூற்றாண்டு காலமாக இந்த உத்தியைக் கையாண்டு வருவதைத் தெரிந்த அறிவியலாளரான தமிழர், அந்த உத்திகளைத் தமிழ் மொழியியலாளருக்கு இதுவரை எடுத்துக் கூறாதமையை என் சொல்வேன்?
பெயர்ச்சொல் எழுத்துக்கூட்டலின் சீர்மையில் முன் அநுபவம் உள்ள ஐநா-கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தை இந்திய அரசு அணுகி, அவர்கள் மூலமாக, உலகில் தமிழர் வாழும் நாடுகளின் பேராளர்களை அழைத்து, தமிழ்ப் பெயர்ச்சொல் எழுத்துக்கூட்டலின் சீர்மைப் பீடம் அமைப்பதும், அப்பீடம் தொடர்ச்சியாகத் தொகுத்து வழங்கும் பெயர்ச்சொல் பட்டியலையே எழுத்துக்கூட்டலுக்கான அறுதியான முடிவாகத் தமிழர் எங்கிருந்தாலும் எக்காலத்திலும் ஏற்று, அவ்வவ் அரசுகள் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவருவதும், வாழும் வளரும் செம்மொழியாகத் தமிழ் மொழி தொடர வழி வகுக்கும்.
செம்மொழி அறிவிப்பை அடுத்து இந்திய அரசு பல்வேறு செயல் திட்டங்களை தமிழ் மொழிக்காக நடைமுறைக்குக் கொண்டுவர உளது. அவற்றுள் ஒன்றாக, பெயர்ச்சொல் எழுத்துக்கூட்டலில் சீர்மைப் பீடம் அமைத்து, அதைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் திட்டத்தையும் அரசு உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு நாம் ஆவன செய்வோமாக.

0 Comments:

Post a Comment

<< Home