பயன்பாட்டுத் தமிழ்

Wednesday, September 28, 2005

செம்மொழியா? சூத்திர மொழியா?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
எந்த ஒரு மொழியும் செம்மொழியாகத் தக்கதா என்பதைத் தீர்ப்போர் மொழியியல் அறிஞரும், பல்கலைக்கழகங்களுமே. பல நாடுகளில், பல்கலைக் கழகங்களே செம்மொழித் தகுதிக்குரிய மொழிகளைப் பட்டியலிட்டுக் கற்பிக்கின்றன; செம்மொழிகளுக்காகத் தனித் துறைகளை அமைத்துள. மேலைப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இலத்தின், கிரேக்கம் இரண்டும் மட்டுமே தொடக்க காலச் செம்மொழிகள். பின்னர் ஈபுறு, பாரசீகம், அரபு, சீனம், வடமொழி ஆகியனவற்றையும் சேர்த்திருக்கின்றனர்.1918இல் சைவசித்தாந்த மகாஜன சமாஜத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலவர்கள், தீர்மானம் இயற்றிச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குஅனுப்பினர். தமிழைச் செம்மொழியாகச் சேர்க்க வேண்டும், செம்மொழிப் பட்டியல் முன்னரே உண்டு. அப்பட்டியலில் அரபு, பாரசீகம், வடமொழி இருந்தன. தமிழையும் அப்பட்டியலில் சேர்க்கவேண்டும் எனத் தீர்மானம் இயற்றினர். 1919, 1920ஆம் ஆண்டுகளில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் இத்தகைய தீர்மானத்தை இயற்றிச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளனர். (வா. செ. குழந்தைசாமி, தமிழா தமிழா, அக்டோபர் 2004)எந்த மொழியையும் செம்மொழியாக இதுவரை சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிக்கவில்லை. முனைவர் மு. வரதராசன், முனைவர் பொற்கோ ஆகிய துறைபோகிய மொழியியல் அறிஞர் இருவரும் துணைவேந்தர்களாகப் பணியாற்றிய காலப் பகுதிகளிலேயும், சைவசித்தாந்த மகா சமாஜத்தின் தீர்மானத்தையோ, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தீர்மானத்தையோ சென்னைப் பல்கலைக்கழகம் எடுத்து நோக்கவில்லை.செம்மொழியாக எந்த ஒரு மொழியையும் அரசு அறிவிப்பது, அம்மொழி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கவும், அம்மொழிப் புலமையாளருக்கு விருது வழங்கவும், இன்னோரன்ன உற்சாக, ஊக்க நடைமுறைகளுக்குமாகவே. வேறெதுவுமல்ல.இந்திய நடுவணரசின் கல்வியமைச்சு, (அதன் இன்றைய வாரிசான மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சு), 1977ஆம் ஆண்டு முதலாக செம்மொழிகளின் வளர்ச்சிக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடுகளை ஏற்படுத்தி, அந்த நிதி எவ்வாறெல்லாம் பயனுறுத்தியது என்பதை, தனது ஆண்டறிக்கைகளில் கூறிவருகிறது. 1947இல் நாடு விடுதலை பெற்ற பின்பு வந்த இவ்வமைச்சின் ஆண்டறிக்கைகளில், தொடக்கத்தில் கூட்டாட்சி மொழி என்ற பிரிவு இருந்தது. இந்தியை வளர்க்கவும், மேம்படுத்தவும், வளமாக்கவும் திட்டங்களை வகுத்து இப்பிரிவில் நிதி ஒதுக்கினர். நடுவண் அரசின் கல்வி அமைச்சே இத்திட்டங்களின் பணிமனை.இந்தியாவின் மூத்த செவ்விய இலக்கியங்களைப் பிறமொழிகளில் மொழி பெயர்க்க, ஐ.நா.வின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்துக்குக் கல்வி அமைச்சு நிதி வழங்கியதையும், 34 மூத்த செவ்விதான இந்திய மொழி நூல்களை ஐ.நா. அமைப்புக்கு அமைச்சு விதந்துரைத்ததையும் 1956-57ஆம் ஆண்டறிக்கை கூறும்.எனினும் 1958ஆம் ஆண்டு வரை, இந்தியைத் தவிர வேறு இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக நடுவண் அரசின் கல்வியமைச்சு நேரடியாக நிதி ஒதுக்கவுமில்லை, ஆண்டறிக்கைகளில் குறிப்பிடவுமில்லை.1958ஆம் ஆண்டு முதலாக நடுவண் அரசின் உள்நாட்டமைச்சு, வடமொழி, பாரசீகம், அரபு ஆகிய மொழி அறிஞருக்குக் குடியரசு நாளன்று விருதும் பணமுடிப்பும் வழங்கத் தொடங்கியது.1959இல் வடமொழி மைய வாரியத்தை நடுவண் அரசு அமைத்தது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பதஞ்சலி சாஸ்திரியை அதன் தலைவராக நியமித்தது. 1997இல் நீதியரசர் ரங்கநாத மிர்சா இவ்வாரியத் தலைவராக இருந்தார்.1960இல் வடமொழி ஆணையம் அமைந்தது. வடமொழி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகளின் தொடக்கம் இவைதாம். கல்வி அமைச்சில் மொழிகளுக்கான பிரிவு ஏற்பட்டது. இந்திக்கும் வடமொழிக்கும் நிதி ஒதுக்கும் பிரிவாக இஃது அமைந்தது.வடமொழியின் வளர்ச்சி, பெருக்கம், வளமாக்கல் யாவுக்குமாக 1961-62இல் ரூ. 645,000 ரூபாய் ஒதுக்கிய நடுவண் அரசு, அத்தொகையைக் குருகுலங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் பகிர்ந்தது.தேவநாகரி வரிவடிவத்தை இந்தியாவிலுள்ள ஏனைய மொழிகளின் ஒலிகளுடன் இணைக்கவோ, அவ்வொலிகளுக்கேற்பப் புதிய வரிவடிவங்களைத் தேவநாகரியில் இணைக்கவோ திட்டமொன்றையும் அரசு கொண்டு வந்தது, நிதியும் ஒதுக்கியது.இந்தியாவின் மாநில அரசுகள் மற்றும் நேரடி ஆட்சிப் பகுதிகள் மூலம் வடமொழியை வளர்ப்பதற்கான நடுவண் அரசின் திட்டம் 1962ஆம் ஆண்டு முதலாக நடைமுறையில் உள்ளது.1964இல் இந்தி மொழி வளர்ச்சிக்கெனத் தனி ஒதுக்கீடு, வடமொழி உள்ளிட்ட இக்கால இந்திய மொழிகள் வளர்ச்சிக்கெனத் தனி ஒதுக்கீடு, என நடுவண் அரசின் கல்வி அமைச்சகம் நிதி வழங்கியது.இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் இதே தலைப்பில் திட்டக்கூறு அமைந்தது. வடமொழியைச் செம்மொழியாக அப்பொழுது கல்வியமைச்சு குறிப்பிடவேயில்லை. இக்கால மொழிகளுள் ஒன்றாகவே வடமொழியை 1964இல் கல்வியமைச்சு கருதியது.ஏனைய இக்கால இந்திய மொழிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் வடமொழியின் பெயரை மட்டும் குறித்தே அப்பொழுதைய திட்டமும் நிதி ஒதுக்கீடும் இருந்தது.கல்வி அமைச்சில் மொழிகளுக்கான பிரிவு என இருந்ததை, 1970ஆம் ஆண்டு முதலாக மொழிகளை வளர்க்கும் பிரிவு என மாற்றினர். இப்பிரிவில் நான்கு தலைப்புகள் இருந்தன. 1) இந்திய மொழிகளில் கலைச் சொல்லாக்கம்; 2) இந்தியின் வளர்ச்சி; 3) ஆங்கிலம் உள்ளிட்ட இக்கால மொழிகளின் வளர்ச்சி; 4) வடமொழி வளர்ச்சி.விடுதலைக்குப்பின் 1958ஆம் ஆண்டு வரை வடமொழி வளர்ச்சிக்கென நிதி எதையும் ஒதுக்காத நடுவண் அரசின் கல்வி அமைச்சு, 1962ஆம் ஆண்டில் பெயர் சொல்லி நிதி ஒதுக்கீடு செய்ததும், 1965ஆம் ஆண்டில் இக்காலமொழிகளுள் ஒன்றாகக் கருதியதும், 1970ஆம் ஆண்டில் வடமொழி வளர்ச்சிக்காகத் தனித்தலைப்பு ஒன்றைக் கல்வி அமைச்சு தொடங்கியதும் படிப்படியான வளர்ச்சியே.தில்லியில் ஒன்றும் திருப்பதியில் ஒன்றுமாக வடமொழிக் கல்விக்கும் வளர்ச்சிக்குமாக 5.5.1970இல் தொடங்கிய இரு நிறுவனங்கள் பின்னர் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆயின.1972ஆம் ஆண்டில் அனைத்துலக வடமொழி மாநாட்டை நடுவண் அரசின் கல்வி அமைச்சே முன்னின்று நடத்தியது. அவ்வாண்டிலேயே மாநிலங்களின் கல்வி அதிகாரிகளை அழைத்து வடமொழியைப் பேணவும், வளர்க்கவும், மேம்படுத்தவும் வழிவகைகளை ஆராயும் மாநாடு ஒன்றையும் நடத்தியது.1977ஆம் ஆண்டில் நடுவண் அரசின் கல்வி அமைச்சிலுள்ள மொழி வளர்ச்சிப் பிரிவில் நான்கு தலைப்புகளாக நிதி ஒதுக்கீடு அமைந்தது. 1) இந்தி மொழி வளர்ச்சி; 2) இக்கால இந்திய மொழிகளின் வளர்ச்சி; 3) ஆங்கிலம் மற்றும் பிற நாட்டு மொழிகளின் வளர்ச்சி; 4) வடமொழி, அரபு மற்றும் பாரசீகம் ஆகிய செம்மொழிகளின் வளர்ச்சி.செம்மொழி என்ற சொல்லாட்சியைக் கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக (1977ஆம் ஆண்டு தொடங்கி) நடுவண் அரசின் கல்வி அமைச்சு பயன்படுத்தி வருகிறது. வடமொழி, அரபு, பாரசீகம் ஆகியன செம்மொழிகள் என்பதை நடுவண் அரசின் கல்வி அமைச்சு ஏற்றுக் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கி வருகிறது.வடமொழி வளர்ச்சிக்காகப் பல இலட்ச ரூபாய்களை ஒதுக்கிய கல்வி அமைச்சு, அந்த ஆண்டில் அரபு மற்றும் பாரசீக மொழிகளின் வளர்ச்சிக்காக மூன்று இலட்சம் ரூபாய்களையும் ஒதுக்கியது.1978ஆம் ஆண்டு வரை உள்நாட்டமைச்சின் பணியாக இருந்த செம்மொழி அறிஞருக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்கும் திட்டம், 1978ஆம் ஆண்டு முதலாக நடுவண் அரசின் கல்வி அமைச்சின் திட்டமாகியது. கல்வியமைச்சின் விதப்புரையில் வடமொழி, அரபு, பாரசீகம் ஆகிய செம்மொழிகளின் புலமையாளருக்குக் குடியரசுத் தலைவர் விருதுகள் கிடைத்து வருகின்றன. 1978 ஆகஸ்ட் 15இல் 97 புலமையாளர் இவ்விருதுகளைப் பெற்றனர்.1981ஆம் ஆண்டு வரை இதே கொள்கை தொடர்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் செம்மொழிகளான வடமொழி, அரபு மற்றும் பாரசீகம் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கி வந்தது.உருது மொழி, சிந்தி மொழி ஆகிய இரண்டையும் வளர்க்க, இக்கால மொழிகளின் தலைப்பில் துணைத் தலைப்புகளாக 1981ஆம் ஆண்டு முதலாகக் கல்வி அமைச்சானது நிதியை ஒதுக்கி வருகிறது.தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது; அனைத்துலக நாடுகளிடையே புரிந்துணர்வை வளர்க்கிறது; நம் பண்பாட்டுப் பராம்பரியத்தைப் பேணுகிறது: எனவே வடமொழிக் கல்வியையும் பயிற்சியையும் மேம்படுத்தி, வளர்க்க இந்திய அரசு பல திட்டங்கைளை அறிமுகம் செய்து நிறைவேற்றி வருகிறது. செம்மொழிகளான வடமொழி, அரபு, பாரசீகம் ஆகியவற்றை வளர்க்கவும் பரப்பவும் முந்தைய ஐந்தாட்டுத் திட்டங்களில் உள்ளது போலவே ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் திட்டக்கூறு உள்ளது. இவ்வாறு கல்வியமைச்சின் 1996-97ஆம் ஆண்டறிக்கையில் கூறியுள்ளனர்.1986ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையிலும் 1992ஆம் ஆண்டின் புதுப்பித்த செயல் திட்டத்திலும் நடுவண் அரசின் வடமொழிக்கான இந்தத் திட்டமும் உள்ளடங்கியது.1990ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சின் மொழிகள் வளர்ச்சிக்கான கொள்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் வரவில்லை.1991ஆம் ஆண்டு முதலாக, உருது மொழி மற்றும் சிந்தி மொழி வளர்ச்சிக்காகத் தனித்தனி வாரியங்கள் அமைந்தன.1994ஆம் ஆண்டு முதலாக வடமொழி, அரபு, பாரசீகம், பாளி, பிராகிருதம் ஆகிய ஐந்து மொழிகளின் புலமைச் சான்றோருக்குக் கல்வி அமைச்சின் விதப்புரையில் செம்மொழிக்கான விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார். இந்த விருது வழங்கல் மூலம் புதிதாதப் பாளியையும் பிராகிருதத்தையும் 1994ஆம் ஆண்டு முதல் செம்மொழிகளாகக் கல்வி அமைச்சு ஏற்றது.1996இல் உருது, சிந்தி ஆகிய மொழிகளின் வாரியங்கள் தரம் உயர்ந்து அம்மொழிகளுக்கான தேசியக் கழகங்கள் ஆயின.வடமொழியானது ஒரு செம்மொழி மட்டுமல்ல; நம் பண்பாட்டுப் பேழையுமாம். இப் பண்பாட்டுப் பேழையைப் பாதுகாக்க வேண்டும், எங்கும் பரப்ப வேண்டும், முயன்று வளர்க்க வேண்டும். இது கட்டாயத் தேவை. எனவே, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணைக்கு அமையவும், 1986ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும் வடமொழிக் கல்வியை வளர்க்க இந்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து, நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு 1996-97ஆம் ஆண்டறிக்கையில் கூறியுள்ளனர்.1999-2000ஆம் ஆண்டு முழுவதையும் வடமொழி ஆண்டாகக் கொண்டாடக் கல்வியமைச்சு நிதி ஒதுக்கியது. விழாக்கள் முழுமையாக முடிவடையாதலால், மீண்டும் மார்ச்சு 2001 வரை கொண்டாட்டத்தை நீடிக்க அமைச்சு மேலதிக நிதி ஒதுக்கியது.2001-02 நிதி ஆண்டில் செம்மொழியான வடமொழிக் கல்விக்கும் வளர்ச்சிக்குமாக ரூ. 1,050 கோடியைக் கல்வியமைச்சு ஒதுக்கியது.செம்மொழியாக ஏற்றுக்கொண்ட அரபு மொழி வளர்ச்சிக்காகக் காலத்துக்குக் காலம் நிதி ஒதுக்கி வந்துளர். 2000-01 நிதிஆண்டில் அரபு மொழி வளர்ச்சிக்காக ரூ. 12 கோடியும் 2001-02 நிதி ஆண்டில் ரூ. 10.5 கோடியும் கல்வி அமைச்சில் ஒதுக்கினர்.2001ஆம் ஆண்டு முதல் இந்திய மொழிகளுக்கான தேசிய அவை அமைந்தது. இந்த அவையும் கல்வி அமைச்சைச் சார்ந்ததே. இந்தியப் பிரதமர் இந்த அவைக்குத் தலைவர். இந்திய மொழிகளை வளர்க்கவும், மேம்படுத்தவும், பரப்பவும் இந்திய அரசுக்கு இந்த அவை ஆலோசனை வழங்கும்.விடுதலைக்குப் பின்வந்த இந்திய அரசின் செம்மொழிச் சொல்லாட்சி, கல்வி அமைச்சின் அறிக்கைகளில் மட்டுமே உளது. 1977ஆம் ஆண்டு முதலாக வடமொழி, பாரசீகம், அரபு என்பன செம்மொழிகளாக இருந்தன. 1994இல் பாளியும் பிராகிருதமும் இந்தப் பட்டியலில் சேர்ந்தன. அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணை, தொடர்ச்சியான ஐந்தாண்டுத் திட்டங்கள், 1986இன் தேசிய கல்விக் கொள்கை என்பன இந்திய அரசின் செம்மொழிச் சொல்லாட்சிக்கும் நிதி ஒதுக்கீட்டுக்கும் அடித்தளமாக அமைந்தன. இந்த அடித்தளத்தில் நடைமுறைச் செயல்பாட்டிற்கான அரசாணைகள் அமைந்திருந்தன போலும்.1964இல் இக்கால மொழிகளுள் ஒன்றெனக் கூறிய வடமொழியை, 1977இல் செம்மொழி எனத் தனிப் பட்டியலிட்டது கல்வியமைச்சு. அத்துடன் அரபு, பாரசீகம் ஆகியனவும் செம்மொழிப் பட்டியலுள் வந்தன. 1994ஆம் ஆண்டில் பாளி, பிராகிருதம் இந்தப் பட்டியலுள் சேர்ந்தது. ஒவ்வொரு மொழியாகச் செம்மொழிப் பட்டியலுள் சேர்த்து வந்தது போலத் தமிழையும் இப்பொழுதாவது சேருங்கள் என்பதைத் தமிழ் மக்கள், தம் ஆணையாக 2004 மக்களவைத் தேர்தலில் கூறினர்.1918ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த மகா சமாஜமும் 1919, 1920இல் கரந்தைத் தமிழ்ச் சங்கமும் இதையே சென்னைப் பல்கலைக்கழகத்திடம் கேட்டனர்.2001-02ஆம் ஆண்டில் ரூ. 1,050 கோடி வடமொழிக்காகவும் ரூ. 10.5 கோடி அரபு மொழிக்காகவும் நிதி ஒதுக்கியதுபோல, கல்வி அமைச்சு தமிழ் மொழிக்கு ரூ. 1,500 கோடியோ ஏற்றதான தொகையையோ நிதியாக ஒதுக்க வகை செய்து, தமிழையும் வளர்க்க, மேம்படுத்த, பரப்ப நடுவண் அரசின் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே தமிழரின் நெடுங்காலக் கோரிக்கை.செம்மொழிப் பட்டியலில் தமிழையும் சேர்ப்பதற்கு முன்னுதாரணங்கள், அதுவும் சிக்கலற்ற முன்னுதாரணங்கள் உண்டென்பதைப் பார்த்தோம். கல்வியமைச்சல்லாத வேறு அமைச்சு தமிழைச் செம்மொழி எனப் புதிதாகப் பட்டியலிடுவது, வடமொழியைத் தேவபாடை எனவும் கல்விக்குரிய மொழி என்றும், தமிழைச் சூத்திர மொழி அல்லது தீட்டு மொழி என்றும் கல்விக்குரிய மொழி அல்லவெனவும் கூறுவதற்கு ஒப்பாகாதா?அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணை, ஐந்தாட்டுத் திட்டக் கூறு, 1986ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை, இவைதாம் தமிழைச் செம்மொழியாக்கும் அரசு அறிவிப்புக்கு அடித்தளமாக வேண்டும். மரபுவழிக் கொள்கையோ, அமைச்சரவைத் தீர்மானமோ, வேறெந்த அரசாணையுமோ, பண்பாட்டமைச்சின் அறிவிப்போ பணியோ தமிழைச் செம்மொழியென நடுவணரசு ஏற்பதற்கு உரியதாகா.2001ஆம் ஆண்டில் அமைந்த பிரதமர் தலைமையிலான இந்திய மொழிகளுக்கான தேசிய அவை கூடி, கல்வி அமைச்சின் செம்மொழிப் பட்டியலில் தமிழைச் சேர்க்குமாறும் உரிய நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறும் ஆலோசனை வழங்க, அதைக் கல்வி அமைச்சு ஏற்று நடைமுறைப்படுத்துவதே தமிழரின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்பதாக அமையும்.

0 Comments:

Post a Comment

<< Home