பயன்பாட்டுத் தமிழ்

Wednesday, October 26, 2005

வள்ளலார் கடிதங்கள்: மதிப்புரை

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஆங்கிலேயர் ஆட்சியின் உச்ச காலங்களில் தமிழ்நாட்டில் அன்புமழை பொழிந்துகொண்டிருந்த ஆன்மீக வள்ளலாரின் 87 கடிதங்களை ஆ. பாலகிருஷ்ணபிள்ளை தொகுத்து 124 பக்கங்களில் தமிழுலகுக்குத் தந்துள்ளார்.
கி.பி. 1923இல் பிறந்து 51 ஆண்டுகள் வாழ்ந்து கி. பி. 1873இல் மறைந்தவர். சிதம்பரம் இராமலிங்கம் எனத் தன்னை அழைக்குமாறு கேட்டுக் கொண்டவர் வள்ளலார்.
நாயக்கர் காலத்தில் தமிழுள் விரவிய வடமொழிச் சொற்களின் இடத்தைப் படிப்படியாக ஆங்கிலச் சொற்கள் நிரப்பி வந்த அக்கால வழக்கையொட்டி வள்ளலாரின் 74 உரைநடைக் கடிதங்களில் ஆங்கில மொழி, வடமொழி மற்றும் உருதுமொழிச் சொற்கலப்பு உள்ளது. 13 செய்யுள்நடைத் திருமுகங்களில் நாயக்கர் கால மரபை ஒட்டி வடமொழிச் சொற்கலப்பு உள்ளது.
ஓட்டல், லாங்கிளாத்து பீசு, ரிஜிஸ்டர், கலக்டர், இஸ்கூல், ரயிட்டர் (ரைட்டர்), ராயல் போன்ற ஆங்கிலச் சொற்கள் தமிழுள் வந்து 150 ஆண்டுகளுக்கு மேலாகின்றன என்பதை இக்கடிதங்கள் வாயிலாக அறியலாம். மெய்யெழுத்தில் சொற்கள் தொடங்காதென்பதால் இஸ்கூல் என்றார். கிளாத் என மெய்யீறு வராதென்பதால் கிளாத்து என்றார்.
ஜில்லா போன்ற உருதுச்சொற்களையும் வள்ளலார் எடுத்தாண்டுளார்.
திர்ப்த்தி, வையாசி போன்று பல வடமொழிச்சொற்கள், தமிழில் வள்ளலார் எழுத்துக் கூட்டியவாறே உள்ளனவா அல்லது படியெடுத்தவரின் எழுத்துக்கூட்டலா தெரியவில்லை.
வள்ளலாருக்கு மிக நெருங்கியவராக இறுக்கம் இரத்தினமுதலியார் இருந்தார். அவருக்கு எழுதிய 37 கடிதங்கள் இத்தொகுப்பில் உள. வள்ளலாரும் இரத்தின முதலியாரும் ஒருவர்மீது ஒருவர் மதிப்பும் அன்பும் நட்பும் கொண்டிருந்தனர். இரத்தின முதலியாரின் நலம் பற்றி வள்ளலார் அதிக ஆர்வம் காட்டினார். வள்ளலாரின் பாடல்களை வெளியிட விரும்பிய இரத்தின முதலியார், அப்பாடல்களை வள்ளலாரிடம் இருந்து பெறுவதற்காகத் தவப்பழி கிடந்தார். ஒருவேளை மட்டும் உண்டார். இதைப்பொறாத வள்ளலார் தவப்பழியைக் கைவிடுமாறு முதலியாரிடம் இரந்தார். இதுபேன்று பல நிகழ்வுகளில் இருவரிடையே இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துவதை இக்கடிதங்கள் காட்டுகின்றன.
வேலு முதலியார், சுந்தரப்பிள்ளை, திருவேங்கடமுதலியார், சோமுச்செட்டியார், நாயக்கர் எனப் பலர் வள்ளலாருக்கும் இரத்தின முதலியாருக்கும் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் குருவாக இராமலிங்க சுவாமியைக் கொண்டனர். ஆனால் அவரோ, `இராமலிங்க சாமியென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில் இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும்' என அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கடிதம் எழுதினார். தனது நட்புக்குரியவரின் குடும்பத்தவரை அன்போடு விசாரிக்கும் வரிகள் வள்ளலாரின் கடிதங்களில் உள.
புதுவை வேலு முதலியாருக்கு எழுதிய 6 கடிதங்களும், நயினார் ராமசாமி, பொன்னுசாமிப்பிள்ளை, சபாபதி சிவாச்சாரியார் ஆகியோருக்கு எழுதிய 5 கடிதங்களும் இத்தொகுப்பில் உள.
சமூக அழுத்தங்களுக்கு வள்ளலார் மதிப்பளித்தார். கடமைகசை் சரிவரச் செய்யாமல்விடின் தான் நிந்தனைக்குள்ளாகவேண்டுமென அவர் எழுதினார். நிந்தனை வராமலிருக்கும் உபாயங்களை மேற்கொண்டார்.
துன்புற்றவர்களுக்கு ஆறுதல் தருவதைத் தன் முதற் கடமையாக்கினார். சிவசிந்தனை, ஜீவகாருண்ணியம் ஆகிய இரு வழிகளையும் கடிதங்களில் வலியுறுத்தினார். பல ஊர்களில் தவச்சாலைகளும் அன்னதான நிலையங்களும் அமைக்க விரும்பினார். அதற்காகப் பயணங்கள் மேற்கொண்டார்.
பயணகாலங்களில் உடல்நலிவுற்றார். அவருக்கு மருத்துவம் தெரிந்திருந்தது. நண்பர்களுக்கு மூலிகை மருத்துவ ஆலோசனைகளைக் கடிதங்களில் எழுதினார்.
தருமச்சாலைகள் அமைத்துத் தொடங்கும் நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பினார். சன்மார்க்க விவேக விருத்தி என்ற இதழைத் தொடங்க நிதி அளித்தோர் பட்டியலும் இத்தொகுப்பில் உளது. தான்பெற்ற அற்புத அறிவுபற்றிக் குறிப்பிடும் சபை விளம்பரம், சமரச வேத பாடசாலைக்கான அறிவிப்பு, அற்புதம் நடைபெறவுள்ளதான வதந்தியை மறுத்த சித்தி வளாக விளம்பரம் உள்ளிட்ட 8 அறிவிக்கைகள் இந்தத் தொகுப்பில் உள.
வள்ளலாரின் இறுதி 3 ஆண்டுகளில் அவர் விட்டுச் சென்ற 9 கட்டளைகளும் இதில் உள. இறந்தவரை எரிக்காமற் புதைக்க வேண்டும் என்ற கட்டளையும், இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக்கொடுத்துத் தந்தையார் உபகாரம் செய்வர், நம்பிக்கையுடனிருங்கள் என்ற கட்டளையும், சுத்த சிவ சன்மார்க்கமே உலகில் இனி வழங்கும் என்ற கட்டளையும், சபை வழிபாட்டு விதிக்கட்டளையும், அவரவர் வழிபாட்டுமுறையை அவரவர் செய்யுமாறும் அதை மற்றவர் தடைசெய்யாதிருக்குமாறும் குரோதங்களை உடனுக்குடன் மறந்துவிடவேண்டும் என்னும் கட்டளையும், சிற்சபையிற் புகுந் தருணமிதுவே என 1873 கார்த்திகையில் எழுதிய கட்டளையும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள.
இந்நூலின் தொடக்கத்தில் பொருளடக்கம் அமைந்திருப்பின் வாசகருக்கு உதவியிருக்கும். கடிதங்கள் பலவற்றின் காலத்தைக் குறிக்காதமை போதிய தகவலைத் தொகுப்பாசிரியர் பெறமுடியாமையையே காட்டுகிறது. 150 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவற்றை மேலும் ஆராய்ந்து கால வரிசைக்குள் கொணர்தல் அவசியம். வள்ளலாரை அதிகம் தெரியாதவர்களுக்காகத் தொகுப்பாசிரியர் அறிமுக முன்னுரையை எழுதியிருக்கலாம். அதை ஓரளவு ஈடுசெயும் வகையான் பேரா. வீ. அரசு எழுதிய முன்னுரை அமைந்துளது.
அக்கால சமூக, பொருளாதார, ஆட்சி, போக்குவரத்து, அஞ்சல் அமைப்புகளின் கண்ணாடியாக உள்ள இந்நூலை அனைத்துச் சமயநெறியில் உள்ள தமிழ் தெரிந்தவர்களும் படிப்பார்களாயின், அன்புநெறியையே பொதுநெறியாகத் தமிழகம் நெடுங்காலமாகப் பல்வேறு வழிகாட்டிகள் மூலம் பேணி வந்ததன் பாங்கை வள்ளலாரின் காலக்கண்களூடாகத் தெரிந்துகொள்வர். வரலாற்று ஆய்வாளர்களுக்கும் இந்நூல் அரிய களஞ்சியம்.


1.10.2002

2 Comments:

At 6:21 AM, Blogger முனைவர் மு.இளங்கோவன் said...

வள்ளலார் பிறந்த ஆண்டு தவறாகக்
குறிக்கப்பட்டுள்ளதைச்சரி செய்யவும்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
+9442029053

 
At 2:40 AM, Blogger வெங்கட், சென்னை said...

"கி.பி. 1923இல் பிறந்து 51 ஆண்டுகள் வாழ்ந்து கி. பி. 1873இல் மறைந்தவர்"

'மறைந்தவர்' என்று எழுதவேண்டாம். வள்ளலார் ஒளி உடம்பாக எங்கு நிறைந்தவர் என்று எழுத வேண்டும்
வெங்கட், சென்னை.

 

Post a Comment

<< Home