தமிழ் படித்தோருக்கு வேலை வாய்ப்பு
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
கணினியியலில் தேர்ச்சி; உடனே வேலை வாய்ப்பு. மருத்துவத்தில் தேர்ச்சி; வருவாய்க்குக் குறைவில்லை. சோதிடத்தில் பயிற்சி; 93 வயதான சோதிடர் வரதன் கொடுக்கும் நன்கொடைகளே அத்துறையின் செழிப்புக்குச் சாட்சி. பொறியியல், உயிரியல், வேதியியல் என நீளும் அறிவியல் துறைகளில் பட்டமும், பயிற்சியும் பெற்றவர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிப்பது குறைவு. வணிகப் படிப்பில் சேர இருக்கும் போட்டியே அதன் வருவாய்ச் செழிப்பின் அளவுகோல்.
வருவாய் மட்டுமல்ல, சமூகத்தின் மதிப்பு, நாட்டின் எல்லைகளைக் கடந்து மனித சமுதாயத்தின் கூட்டு வளர்ச்சிக்குப் பங்காற்றினோம் என்ற மன நிறைவு, இவை யாவும் மேற்கூறிய துறைகளில் பயின்றோருக்குக் கிடைக்கிறது.
ஆனால், பட்டப் படிப்புகளைத் தமிழ் மொழியியலிலும் தமிழ் இலக்கியத்திலும் அனைத்து மட்டத்திலும் பயின்றோர் வருவாய்க் குறைவால் வாடுகின்றனர். அத்தகையோருக்காகச் சங்கம் ஒன்றே இயங்கி வருகிறது; வேலைவாய்ப்புகளைப் பல்வேறு நிலைகளில் உருவாக்க முயல்கிறது; அவர்களின் முன்னேற்றத்துக்கான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகிறது.
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் கணிதத்தில் புலி. பட்டப் புகுநிலையில் கணிதத்தைப் பாடமாகப் படித்தவர்; தந்தையாரின் தமிழ்ச் சூழல் பட்டப் படிப்புக்குத் தமிழைப் பாடமாகக் கொள்ள இவருக்கு ஆர்வத்தைத் தந்தது. தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் இவரைப்போல் தமிழைப் படிக்க வருவோர் மிகக் குறைவு.
வேறு துறைகளில் இடம் கிடைக்காதவர்களே பெரும்பாலும் தமிழைப் பாடமாகப் படிக்க வருகின்றனர். வடிகட்டலில் கடைநிலையில் உள்ளோர், இருக்கவே இருக்கிறது தமிழ் எனக் கருதித் தமிழைப் பாடமாகக் கொள்கின்றனர்.
தமிழைப் பாடமாகப் படித்தோரிடையே வேலைவாய்ப்புக் குறைவுக்கான காரணங்கள்:
வேறுவழியின்றித் தமிழுக்கு வந்தோர், தமிழ்ப் பட்டதாரிகளாக, புலவர்களாக வெளிவருகின்றனர். வேலைவாய்ப்புப் போட்டியிலும் பிற துறையாளர் போல் இவர்களால் முன்னிற்க முடிவதில்லை.
வளர்ச்சிக்கு உரிய கருவியாக, தொடர்புக்கு உரிய வாகனமாகத் தமிழ் தொடரவேண்டும் என்ற கண்ணோட்டமில்லாப் பாடத்திட்டங்கள் மலிந்த கல்விச் சூழ்நிலை.
தமிழைப் பாடமாகப் படித்தவர்களை எங்கெங்கெல்லாம் பணிகொள்ளலாம் என்ற கருத்தோட்டமற்ற சமூக அமைப்பு.
தமிழைப் பாடமாகப் படித்துவிட்டு, கடந்த நாற்பது ஆண்டு காலப்பகுதியில் பணிக்குச் சேர்ந்த பெரும்பாலோரின் பணிச் சோர்வு.
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியையே தமிழர் பயனுறுத்த வேண்டும் என்ற கொள்கையற்ற சூழ்நியைில், பிறமொழிகளை வாழ்வுடன் இணைக்காமல் தமிழர் வாழ்வு முழுமை பெறாது என்ற பிறழ்ச்சிச் சிந்தனையாளரின் உள்ளீடுகள் சமூகத்தின் நச்சு வேராகியதால், தமிழைப் பாடமாகப் படித்தோர் தாழ்நிலையினரென்ற கருத்துருவாக்கம்.
தமிழைப் பாடமாகப் படிப்போருக்குரிய புகழ் + வருவாய் இலக்குகளான பட்டிமன்ற மேடைகள், பேச்சு மேடைகள், ஒலி-ஒளி-அச்சு ஊடக வெளிப்பாடுகள் யாவிலும் தமிழரின் பண்டைய பெருமைபேசி அரைத்த மாவை அரைப்பதில் யார் தம்முள் வல்லவர் என்ற பொறாமை மிகு போட்டிச் சூழல்.
தமிழைப் பாடமாகப் படித்தோரின் வேலைவாய்ப்பைப் பெருக்கச் செய்யவேண்டியன:
தொடக்கப் பள்ளிகளில் அறிவியல் தமிழ் என்ற பாடநூலைத் தமிழக அரசு அறிமுகம் செய்துளது. சென்னைப் பல்கலைக் கழகக் கலையியல் இளவல் பட்டத்துக்குத் தமிழைப் பாடமாகப் பயில்வோர் பயன்பாட்டுத் தமிழ் என்ற நூலைக் கட்டாயமாகப் படிக்கும் நிலை வந்துளது. இவை என் கவனத்துக்கு வந்தவை. இத்துறையில் வேறு முயற்சிகளும் இருக்கக் கூடும். வளர்ச்சிக்குரிய கருவியாகத் தமிழ் மொழியை எடுத்துச் செல்ல இத்தகைய பாடத்திட்டச் சீராக்க முயற்சிகளைத் திட்டமிட்டு வேகமாக முன்னெடுக்க வேண்டும். தமிழைப் பாடமாகப் படிப்போரின் கண்ணோட்ட மாற்றத்துக்குப் பாடத்திட்டச் சீராக்கமே வழிகாட்டி. வளர்ச்சிக்கும் தொடர்புக்கும் உரிய மொழியாகத் தமிழை எடுத்துச் செல்லத் தமிழைப் பாடமாகப் படித்தோரே பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுவர்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ், பொங்கு தமிழ் என்பன முழக்கங்களாவே நின்றுவிடுகின்றன. துறைதொறும் துறைதொறும் தமிழ் வழங்கும் நிலை வருமாயின், ஒவ்வொரு துறையிலும் தமிழைப் பாடமாகப் படித்தோரின் துணை தேவையாகும். அவ்வத் துறைகளுள் உள்ளோர் ஒவ்வொருவரும் மொழி வல்லுநராக இருப்பது அரிது. கணக்காளர் இருப்பதுபோல, ஆவணக் காப்பாளர் இருப்பது போல, களஞ்சியக் காப்பாளர் இருப்பது போல, ஒவ்வொரு துறையிலும் தமிழ்மொழிக் காப்பாளர் இருப்பர். தொடர் வண்டிகளில் எக்ஸ்பிரஸ் வராது; பேருந்துகளில் 29அ வராது; இதழ்களில் இந்தியா டுடே வராது; திரைகளில் தேவதையை(?) கண்டேன் வராது; தொலைக்காட்சியும் வானொலியும் ஆடுகள் வந்தது எனப் பேசா; அறிவியலாளர், வணிக மேலாளர், பெயர்ப்பலகை எழுதுவோர் தமிழ்ச் சொற்களைத் தூக்கி எறியார்.
தமிழாசிரியராக, எழுத்தாளராக, இதழாளராக, மெய்ப்பாளராக, பேச்சாளராக மட்டுமே வேலை தேடும், தமிழைப் பாடமாகப் படித்தோரைத் தமிழ் மொழி வளர்ச்சியாளராகப் பார்க்கின்ற சமூகக் கண்ணோட்டத்தை உருவாக்கினால், அவர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும். முன்பு அப்படித்தான் இருந்தது; சங்கம் அமைப்பவரோ, கடை தொடங்குபவரோ, அவ்வமைப்புக்குப் பெயர் வைக்க முதலில் தேடுவது தமிழ்மொழி அறிஞரையே. இன்று அவரவர் தனக்குத் தெரிந்தவாறு பெயர் வைக்க முற்படுவதால் போராட்டங்கள் வெடிக்கின்றன. சோதிடரை நாடும் மூடப் பழக்கத்தை விடாத சமூகம், தமிழ் மொழி அறிஞரை நாடும் நல்ல பழக்கத்தைக் கைவிட்டதே!
தமிழைப் பாடமாகப் படித்தவருள் பெரும்பாலோர் போதுமான தமிழ் மொழிப் புலமையாளராக இல்லாதிருப்பதால் பணியிடங்களில் திறமையுடன் மிளிரமுடியவில்லை. வடிகட்டலில் கடைநிலையாரை மட்டுமே ஈர்க்காமல், போக்கற்றவர்களின் புகலிடமாகத் தமிழ்ப் பாடப்யிற்சி அமையாமல், திறமைசாலிகளை மாணவர்களாக ஈர்க்கும் நிலை வரின், தமிழைப் பாடமாகப் படித்தோருக்கு வேலைவாய்ப்புப் பெருகும்.
இந்திய மாநில மொழிகள், தென்கிழக்காசிய மொழிகள், மேற்காசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய மொழிகள் இவற்றுள் ஒன்றையேனும் தமிழுடன் சேர்த்துப் பயிலவேண்டிய கட்டாயம் தமிழைப் பாடமாகக் கொள்வோருக்கு உண்டு. திணித்தால் கற்போம் என்ற உளப்பாங்கை மாற்றி, விரும்பிக் கற்கும் நிலை வந்தால், தமிழர் வாழாத மாநிலங்களிலும் நாடுகளிலும் மொழிபெயர்ப்பாளராகத் தமிழைப் பாடமாகக் கற்றோருக்கு வேலைவாய்ப்புண்டு.
தமிழ் தெரியாதோருக்குத் தமிழ் கற்பிக்கும் திறனை வளர்க்கும் பாடத்திட்டத்தைத் தமிழைப் பாடமாகக் கொள்வோருக்கு வகுத்தால், உலகின் 85 நாடுகளில் பரந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கும், தமிழ்மொழி மீது காதல் கொண்டு பயில விரும்பும் பிற மொழியாருக்கும் தமிழ்மொழி கற்பிக்கும் வேலைவாய்ப்புகள் பெருகும்.
எழுத்தும் அச்சும் தகவல் பரிமாற்றமும் வேகமாக வளர்கையில், மொழி வல்லுனர்களின் தேவை அதிகரிக்கும். ஒவ்வொரு துறையிலும் அவ்வத் துறைபோகியோர், தத்தம் கருத்துகளை, நிகழ்வுகளை, எழுதியபின் மொழி வல்லுநர் ஒருவரின் பார்வைக்கு அனுப்பும் காலம் வரும். தமிழைப் பாடமாகப் படித்தோருக்குப் பதிப்பாசிரியர் பணி அங்கு காத்திருக்கும்; மொழியில் மட்டுமல்ல, பதிப்பு ஒழுங்கிலும், மெய்ப்புப் பார்ப்பதிலும் வல்லுநராகித் தமிழைப் பாடமாகப் படித்தோர் வேலை பெறுவர்.
அறிவியலும் தொழினுட்பமும் வேகமாக வளர்கையில் புதுப் புதுச் சொற்களை உருவாக்க வேண்டும்; தொடர்களைக் குறுக்கங்களாக்க வேண்டும். மொழிப் புலமை, வேர்ச் சொற்களிற் புலமை, வேர்களுடன் விழுதுகளைச் சேர்த்துப் புதுச் சொற்களை உருவாக்கும் திறமை, தமிழ்த் தொடர்களுக்கு ஒலிஇயைந்த குறுக்கங்களை உடனுக்குடன் ஆக்குந் திறமை உடையோருக்கு வேலைவாய்ப்புகள் பெருகும்.
கவர்ச்சியான தமிழ்த் தொடர்களை எழுதுவோருக்கு விளம்பர நிறுவனங்கள் செழிப்பான பணமுடிப்பு வழங்குகின்றன. விளம்பரமில்லாத உற்பத்தி வெல்லாது; உற்பத்தியில்லாத பொருண்மியம் உதவாது; கவர்ச்சித் தொடரில்லா விளம்பரத்தால் விற்பனை பெருகாது; தமிழில்லாமல் பொருண்மியமே வளராது. எனவே புலமைத் தமிழ் மொழியாளரைத் தேடுகின்றன விளம்பர நிறுவனங்கள்.
தமிழில்லாமல் வாழ்வில்லை என்ற சூழ்நிலையை நோக்கித் தமிழர் முன்னேறுகையில் தமிழைப் பாடமாகப் படித்தோருக்கான வேலைவாய்ப்புகள் அளவுக்கதிகமாகவே வரப்போகின்றன. அரைத்த மாவை அரைப்போரை உருவாக்கும் பாடத்திட்டங்களை மாற்றி, தமிழை வளர்ச்சிக்குரிய மொழியா மாற்றும் பாட்த்திட்டங்களே, தமிழைப் பாடமாகக் கொள்வோருக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கும்.
0 Comments:
Post a Comment
<< Home