பயன்பாட்டுத் தமிழ்

Wednesday, October 26, 2005

உலகத் தமிழருக்குப் பண்பாட்டுச் சாளரம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
செட்டிநாட்டுக்கு விழா ஒன்றுக்குப் போயிருந்தேன். திருமயத்துக்கு அருகே இராமச்சந்திரபுரத்தில் ஒரு வீட்டில் தங்கினேன். அது வீடல்ல, மாளிகை. இருபதுக்கும் அதிகமான அறைகள். நாற்சார முற்றங்கள் மூன்று. பல அடுக்களைகள். மாளிகையின் நான்கு சுவர்களும் நான்கு தெருக்களை ஒட்டி இருந்தன. மாளிகையில் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும் இருந்தார். ஆண்டுக்கு ஒருமுறையே உரிமையாளரான நகரத்தார் இல்லத்தவர் அங்கு வருவார்களாம்.
யாழ்ப்பாணம் சிவன்கோயில் மேற்கு வீதியில் அரிசிமண்டி நடத்திய வணிகரான நகரத்தார் கட்டிய மாளிகையே அது. பர்மாவில் இருந்து அரிசியை இறக்கி இலங்கை முழுவதும் விற்பனை செய்தவர் அவ்வணிகர். மாளிகை மரவேலை முழுவதும் பர்மாத் தேக்கு. வரவேற்பு அறையின் அலங்காரம் முழுவதும் ஐரோப்பியக் கலைவண்ணம்.
செட்டிநாடு முழுவதுமே இத்தகைய பல மாளிகைகளைக் காணலாம். சைகோன், சிங்கப்பூர், பினாங்கு, ரங்கூன், மண்டலே, யாழ்ப்பாணம், கொழும்பு எனத் தென்கிழக்காசியாவின் வணிகத்தில் பல நூற்றாண்டுகாலமாகப் பங்காற்றி வருபவர்கள் நகரத்தார்கள்.
அவர்கள் கொணர்ந்த செல்வமும் சொத்தும் அயலகப் பழக்க வழக்கங்களும் ஏராளம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் எனத் தொடங்கிக் கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், திருக்கோயில் திருப்பணிகள் எனப் பல்துறை அறக் கொடைகளால் தமிழகம் பயன்பெற்றது. மாதாந்த உண்டியல் வருகையால் பல குடும்பங்கள் செழித்தன.
முப்பது பழந்தமிழ் நூல்களைத் தனிஒருவரின் முயற்சியாகப் பதிப்பித்த ஆறுமுக நாவலரும், தொல்காப்பியம், கலித்தொகை உள்ளிட்ட 11 நூல்களை முதன்முதலில் அச்சுவாகனம் ஏற்றிய சி. வை. தாமோதரனாரும் தமிழகத்தின் பண்பாட்டுச் செல்வத்துக்குக் காலந்தோறும் உரமூட்டி வருவோர் வழிவந்த ஈழத் தமிழ் மரபினர். சிங்கப்பூர் கோவிந்தசாமியும் மலேஷிய முரசு மாறனும் யாழன் சண்முகலிங்கமும் கணிப்பொறித் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பால் தமிழகம் பயன்பெற்று வருகிறது.
நகரத்தாரின் நீண்ட காலப் புலம்பெயர் வணிகம், ஆங்கிலேயர் காலத் தமிழ்த் தொழிலாளர் புலம்பெயர்வுகள், எண்ணெய்ச் செல்வம் ஈர்த்த அண்மைக் காலத் தமிழர் புலம்பெயர்வுகள், ஈழப்போரினால் அகதிகளாய்ப் புலம் பெயர்வுகள் யாவும் திரைகடலோடித் திரவியம் தேடிவர வழிவகுத்தன.
தமிழகக் கரைகளுக்கு வெளியே தமிழர் தொடர்ந்தும் தமிழராக வாழ்வது எளிதானதல்ல. மலாக்காச் செட்டிகளும், கொழும்புச் செட்டிகளும் தமிழை மறந்து, தமிழராக வாழ்வதை மறந்து, புகுந்த மண்ணுடனும் பண்பாட்டுடனும் ஐக்கியமாகினர். பிஜி, மொரிசியசு, தென் ஆபிரிக்கா, சீசெல்சு, பிரான்சு, இறியுனியன், சுரிநாம், ஆகிய நாடுகளுக்கு ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் அழைத்துச் சென்ற தமிழர், தமிழ் மொழியைப் பேச எழுத மறந்த தமிழராக வாழ்ந்து வருகிறார்கள். பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குக் ஆங்கிலேயருடன் சென்ற தமிழர் மட்டும் தமிழை மறக்காமல் பண்பாட்டையும் மறக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். அண்மைக் காலங்களில் ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் புலம்பெயர்ந்த தமிழக, மற்றும் ஈழத் தமிழர்களின் சந்ததியினர் தமிழர்களாகத் தொடர்வார்களா? அன்றி அந்தந்த மண்ணுடன் ஐக்கியமாகிவிடுவார்களா? இதைக் காலம் தான் உணர்த்தும்.
தம் தாய் நாட்டை விட்டுப் புலம்பெயர்பவர்கள் தமிழர் மட்டும்தான் அல்ல. கடந்த 500 ஆண்டுகளில் அதிகம் புலம்பெயர்ந்தவர்கள் அராபியர்களும் ஐரோப்பியர்களுமே. வணிகத்துக்காவும் நாடு பிடிக்கவும் இவர்கள் கடலாடினர்
தங்கள் மொழிகளையும் மரபுகளையும் எடுத்துச் சென்ற இவர்கள், சென்ற இடங்களில் அவற்றைப் பேணியதுடன் மற்றவர்கள் மீதும் திணித்தார்கள். 58 நாடுகளில் ஆங்கிலம் வழங்குகிறது. 46 நாடுகளில் பிரஞ்சு வழங்குகிறது. 24 நாடுகளில் ஸ்பானிய மொழி வழங்குகிறது. 24 நாடுகளில் அரபுமொழி வழங்குகிறது. டானிஷ், டச்சு, இத்தாலி, போத்துக்கேயம் ஆகியவை சில நாடுகளில் வழங்குகின்றன.
அடையாள உணர்வுத் தேடலுக்கும் பாதுகாப்புக்கும் மொழியும் பண்பாடும் முக்கியம் என்பதால், புலம்பெயர்ந்து வாழும் அமெரிக்க, ஐரோப்பியரைத் தத்தம் தாய்ப்பண்பாட்டுடன் ஈர்த்துப் பிணித்து வைக்கவும், சேர்ந்த நாட்டின் பண்பாட்டுடன் ஐக்கியமாகி விடாமல் இருக்கவும் ஐரோப்பிய அரசுகளின் சிறந்த அடித்தள அமைப்புகள் செயற்படுகின்றன.
தமிழர் விட்டு வந்த மலாக்காச் செட்டிகள் போன்றோரே ஆங்கிலோ இந்தியர். இத்தகைய கலப்பினர் பல நாடுகளில் உளர். எனினும் அவர்கள் ஐரோப்பிய மொழி-பண்பாட்டினைத் தொடரத் தேவையான அமைப்புகளை ஐரோப்பிய அரசுகள் அமைத்துள.
அல்லயன்ஸ் பிரஞ்சைஸ், அமெரிக்கத் தகவல் நடுவம், பிரிட்டிஷ் கவுன்சில், போன்ற அமைப்புகள் உலகெங்கும் உள்ளன. அவை இல்லாத நாடுகளில் அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் அப்பணியைச் செய்கின்றன.
ஏடனில் நான் தங்கியிருந்தபொழுது பிரிட்டிஷ் தூதரகம், தம் நூலகத்தைப் பயன்படுத்துமாறும், வாரம் ஒருநாள் இலண்டனில் இருந்து வரும் திரைப்படத்தைப் பார்க்க வருமாறும் நிலையான அழைப்பை எனக்குத் தந்ததற்கு ஒரே காரணம் நான் ஆங்கிலமொழியைத் தெரிந்தவன் என்பதுதான். ஏனெனில் ஏடனில் அப்பொழுது கம்யூனிச அரசு இருந்தது. ஆங்கிலப் படங்களை வெளியே பார்க்க முடியாது. அங்குள்ள ஆங்கிலேயர், அமெரிக்கர், ஆங்கிலம் தெரிந்த ஆபிரிக்கர், ஆகியோர் பார்க்கும் வசதிக்காக, பிரிட்டிஷ் அரசு வாரம் தோறும் ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை விமானத்தில் அனுப்பும், இலண்டனில் வெளியாகும் நாளிதழ்கள், செய்தி இதழ்கள், நூல்கள் ஆகியவற்றையும் பிரிட்டிஷ் அரசு அனுப்பும்.
ஆங்கிலேயர் எங்கு புலம்பெயர்ந்தாலும் ஆங்கில மொழி - பண்பாட்டுடன் வாழ்வதையும் அடையாள உணர்வு போய்விடாமல் பாதுகாப்பதையும் தனது கடமையாக பிரிட்டிஷ் அரசு நினைப்பதன் நீட்டமே பிரிட்டிஷ் கவுன்சிலின் அமைப்பும் செயற்பாடும். பிரஞ்சுக்காரர் எங்கிருந்தாலும் பிரஞ்சுக்காரராகத் தொடரவேண்டும் என்ற பிரஞ்சு அரசின் கடமை உணர்வின் வெளிப்பாடே அல்லயன்ஸ் பிரஞ்சைஸ் அமைப்பும் செயற்படும். ஜெர்மானிய, டச்சு, இத்தாலிய டானிஷ் போர்த்துக்கேய அரசுகளும் இத்தகைய அமைப்புகளைப் பிற நாடுகளில் அமைத்துள.
புலம்பெயர்ந்த தமிழர்கள், புகுந்த நாடுகளில் தமிழராகத் தொடர்வதை ஆதரிக்க வேண்டும் என்ற கண்டோட்டம் தமிழ்நாட்டில் குறைவு. கலைக்குழு வேண்டுமெனில், பயணச்சீட்டுடன் உணவு உறையுளையும் சம்பளத்தையும் வெளிநாட்டுத் தமிழர் கொடுக்கவேண்டும், தமிழ் நூல்களை விலைகொடுத்து வாங்கவேண்டும்.
1968இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாட்டுக்கும் பின்னர்தான் தமிழக அரசு மட்டத்தில், அயலகத் தமிழர் பற்றிய புரிந்துணர்வு ஏற்படத் தொடங்கியது. சிறு சிறு முயற்சிகளாக அப்புரிந்துணர்வு வெளிப்பட்டது.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பிஜித்தமிழருக்குத் தமிழ் கற்பிக்கப் பாடத்திட்டம் வகுத்து உதவியதுடன் தமிழ் நூல்களை அச்சிட்டு வழங்கியது. மொரிசியசு சென்று வந்த அந்நாள் அமைச்சர் இராசாராம் அந்நாட்டுக்குத் தமிழ் நூல்களை அனுப்பினார். அண்மையில் அங்கு இசை ஆசிரியர் ஒருவரை ஓராண்டுக்கு அனுப்பியிருந்தது தமிழக அரசு. ஈழத்துத் திருக்கேதீச்சரத் திருப்பணிக்குத் தமிழக அரசு கல்தூண்கள் அமைத்துக் கொடுத்தது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்குத் தமிழ் நூல்களைத் தமிழக அரசு வழங்கியது. உலகத் தமிழாராய்ச்சியாளரை இணைக்க அனைத்துலகத் தமிழாராரய்ச்சி நிறுவனமும், உலகத் தமிழரை இணைக்க உலகத் தமிழ்ச் சங்கமும் அமைந்தன. தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழருக்காகத் தமிழ் மொழிப் பயிற்சி வகுப்புகளை நடாத்தியது. சென்னை, திருநெல்வேலிப் பல்கலைக் கழகங்கள் உலகத் தமிழருக்கு அஞ்சல்வழிக் கல்வியை அறிமுகம் செய்தன. மருத்துவம் மற்றும் தொழில் நுட்பக் கல்விகளில் உலகத் தமிழருக்கு இடஒதுக்கீடுகள் அமைந்தன. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இவ்வழி முயற்சியே.
அரசு சாரா முயற்சிகளாக, பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகம், உலகத் தமிழர் மையம் பேன்றவை அமைந்து தமிழகத்துக்கும் உலகத் தமிழருக்கும் இடையே உறவுப்பாலங்கள் அமைத்தன. மார்கழியில் சென்னையில் உலகத் தமிழ்க் கலைஞர்களுக்காகத் தனியாக இசை நடன விழா அமைந்து வருகிறது.
பாலைவனத்தில் பசுஞ்சோலைகளாக இடையிடையே இவை தெரிந்தாலும் உள்ளகக் கட்டமைப்புள்ள தொடர்ச்சியான அமைப்பு எதையும் தமிழக அரசு நிறுவவில்லை. உலகத் தமிழச் சங்கம் உயிர் பெறவேயில்லை. அல்லயன்ஸ் பிரஞ்சைஸ், பிரிட்டிஷ் கவுன்சில் போன்ற பண்பாட்டுச் சாளரம் ஒன்றைத் தமிழக அரசு அமைக்கவில்லை.
ஓர் இலட்சம் தமிழருக்கு மேல் வாழும் பிஜி, மொரிசியசு, இறியுனியன், தென்ஆபிரிக்கா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, எமிரேட்ஸ், இலங்கை ஆகிய பத்து நாடுகளிலும் பத்துத் தமிழ்ச் சாளரங்களை அமைக்க இதுவே நல்ல சூழ்நிலை. அச்சாளரங்கள் வழி தமிழ்த் தென்றல் அந்த நாடுகளுக்குள் வீசும். தமிழகத்தில் வெளிவரும் நாளிதழ்கள், சஞ்சிகைகள், நூல்கள், ஒலி ஒளி நாடாக்கள் அம்மையங்களில் தவழவேண்டும். தமிழ்நாட்டைப் பற்றிய சுற்றுலா, கல்வி, மருத்துவத் தகவல்கள் அங்கு சேரவேண்டும். அந்நாட்டுத் தமிழர் தமிழகத்துடன் தொடர்பு கொள்ளவும் தமிழகத் தமிழர் அந்நாட்டுத் தமிழருடன் உறவு கொள்ளவும் இப்பண்பாட்டுப் பலகனி பாலமாக அமையும். கலைக்குழுக்களையும் ஒவியர், எழுத்தாளர், தமிழ்க்கணிப்பொறி வல்லுனர்களையும் அந்நாடுகளுக்கு அனுப்ப இச்சாளரம் பயன்படும். தமிழ்க் கலைச்சொல் சீர்மை, கணிப்பொறித் தமிழ் வளர்ச்சி, தமிழ் இலக்கணச் சீர்மை போன்ற தமிழ் வளர்ச்சி முயற்சிகளை ஒருங்கிணைக்க இச்சாளரம் உதவும்
இலங்கையில் ஆட்சி மொழி, சிங்கப்பூரில் தேசிய மொழி, மலேசியாவிலும் மொரிசியசிலும் பிஜியிலும் பாடமொழி எனப் பரந்து பயனுறுத்தி வரும் மொழியாகத் தமிழ் இருப்பதால், உலகத் தமிழர் தத்தம் பண்பாட்டு அடையாளங்களைப் பேண, உள்ளகக் கட்டமைப்புள்ள தொடர்ச்சியான அமைப்பை ஏற்படுத்துவதே தமிழகத்தின் தொப்புட் கொடிக் கடமையாகும்.
திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழரால் தமிழகம் பெற்ற நன்மைகளுக்கு ஈடாக, இன்றைய உலகமயமயாக்கச் சூழலில் தமிழகம் உலகத் தமிழருக்குச் செய்யவேண்டிய முக்கியமான கடமைகளுள் இதுவுமொன்றாகும்.

0 Comments:

Post a Comment

<< Home