பயன்பாட்டுத் தமிழ்

Tuesday, May 02, 2006

நீர்மையும் உவர்மையும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கண்ணீரை நாக்கில் விட்டுப் பாருங்கள். உப்பு உறைக்கும். வியர்வையிலும் உப்பு உண்டு.
கடல் நீரிலும் உப்பு உண்டு. கடல் நீர் உப்பாக இருப்பதன் காரணம் என்ன? சிங்கள மேலாட்சியின் கொடுமைகளைத் தாங்காத ஈழத்தமிழர் வடித்த கண்ணீர் கடலில் கலந்ததால், கடல் நீர் உப்பாக உள்ளதாம்; சொன்னவர் அறிஞர் அண்ணா. இலக்கிய நயத்துடன் கூறிய இவ் வரிகள், தன் உடன் பிறப்புகளின் எல்லையற்ற கடும் துன்பத்தை விளக்க அறிஞர் அண்ணா கூறிய வரிகள்.
கடல் நீரைச் சூடாக்கினால் நீர் ஆவியாகும்; உப்பு எஞ்சி நிற்கும். கோடை காலத்தில், கடற்கரை அருகே, வரப்புகளை அமைத்து, வயல்களாக்கி, அதற்குள் கடல் நீரை இறைத்து, சூரிய வெப்பத்தில் காய விட்டால், நீர் ஆவியாகும்; வயல் முழுவதும் உப்புப் படியும்; உப்பளங்களில் இவ்வாறு உப்பை விளைவிக்கிறார்கள்.
உலகின் மொத்தப் பரப்பளவில் 77% கடற் பரப்பு. எஞ்சியதே நிலப் பரப்பு. நிலத்திலிருந்து படிப்படியாக ஆழம் அதிகரித்து, மிக ஆழமான பகுதிகளைக் கொண்டதே கடல்.
கரையோரக் கடல் ஆழம் குறைந்தது, நெடுங்கடல் ஆழம் நிறைந்தது.
கரையோரக் கடலும் பல்வகையின. நிலத்தில் ஒறுவாய் ஏற்பட, கடல் நீர் உள்புகும். நிலத்திலிருந்து வடியும் நீரும் அந்த ஒறுவாயுள் சேரும். இத்தகையனவற்றை, ஆற்றுவாய் எனவும், கழிமுகம் எனவும், களப்பு எனவும், கடனீரேரி எனவும், குடாக்கடல் எனவும், உட்கடல் எனவும் பல்வேறு பெயரிட்டு அழைப்பர்.
அருகருகே உள்ள நிலப்பரப்புகள்; அந்த நிலப்பரப்புக்கு இடையே ஆழம் குறைந்த கடல்; நீரால் இணைக்கப்பெற்ற நிலப்பரப்புகள்; அந்தக் கடலை நீரிணை என்பர், கால்வாய் என்பர். இந்தியாவின் பெரிய நிலப்பரப்பு, தெற்கே இலங்கைத் தீவு; இந்திய நிலப்பரப்புக்குத் தென்கிழக்கே, இலங்கைத் தீவுக்கு வடமேற்கே, ஆழமற்ற கடல் இரு நிலப்பகுதிகளையும் இணைக்கிறது. அந்தக் கடலே பாக்கு நீரிணை. பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஒடுங்கும் கடல் ஆங்கிலக் கால்வாய்.
நெடுங்கடலுடன் ஒரு திக்கில் குறுகிய, ஆனால் நேரடித் தொடர்புடைய, ஏனைய மூன்று திக்குகளும் நிலப்பரப்பு வளைத்துள்ள கடல், வளைகுடா. தூத்துக்குடிக் கரை அல்லது கீழக்கரை மேற்காக, சேதுத் திடல் தொடர் வடக்காக, இலங்கையின் புத்தளம் - கற்பிட்டிக் கரையோரம் கிழக்காக வளைந்து, தெற்கே இந்தியப் பெருங்கடலுடன் நேரடித் தொடர்புள்ள குடாக் கடல், மன்னார் வளைகுடா. அவ்வாறே பாரசீக வளைகுடா, மெக்சிகன் வளைகுடா போன்றன.
பரப்பளவில் பெரியதாய், அகன்று விரிந்த திக்கில் நெடுங்கடலுடன் நேரடித் தொடர்புடையதாய், எஞ்சிய திக்குகள் நிலப்பரப்பை ஒட்டியதாய் உள்ள கடல் விரிகுடா. இந்தியத் துணைக்கண்டம் மேற்கே, மலாயாக் குடாநாடு கிழக்கே, இந்தியப் பெருங்கடலுள் விரியும் கடலே வங்காள விரிகுடா. அவ்வாறே பிஸ்கே விரிகுடா போன்றன.
பரப்பளவில் பெரியதாய், ஆழத்தில் அதிகமாய், நிலப்பகுதிகளை ஒட்டியும் நெடுங்கடலோடு நேரடித் தொடர்புடையதான பரந்த, விரிந்த நீர்த்தொகுதியே கடல்; இதனைச் சிறுகடல் என்பாரும் உண்டு. இந்தியாவுக்கு மேற்கே, அரேபியக் குடாநாட்டுக்குக் கிழக்கே உள்ளது அரபிக் கடல். அவ்வாறே அந்தமான் கடல், பிலிப்பைன்ஸ் கடல் போன்றன.
ஆற்றுவாய் தொடங்கி, சிறுகடல் ஈறாக உள்ள நீர்த் தொகுதிகளுக்குத் தாயான நீர்த்தொகுதியே நெடுங்கடல். உலகின் பரப்பில் நான்கு நெடுங்கடல்கள் உள. அவற்றைப் பெருங்கடல் என இன்று அழைப்போம். இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அத்திலாந்திக் பெருங்கடல், ஆர்க்ரிக் பெருங்கடல் என்பன அவை.
ஆழம், இருக்குமிடம், பரப்பு, விரிவு போன்ற தன்மைகளில் வேறுபடுவதால் வெவ்வேறு பெயர்கள். ஆனாலும் ஒரே இயல்பான உப்புத்தன்மை கொண்ட நீரே இந்த நீர்த் தொகுதிகளில் உள்ள நீர்.
கடலில் உப்பும் உண்டு, நீரும் உண்டு, இவை இரண்டும் வேறறக் கலந்துள்ளன. ஆனாலும் கடலை உப்பு என யாரும் அழைப்பதில்லை. கடலை நீர் எனவே அழைப்பர். ஏனெனில் கடலில் கண்ணுக்கு நீர் தெரிகிறது, கரைந்த உப்புத் தெரிவதில்லை. நாக்கில் கடல் நீரை விட்டால், நீர்மையும் (நீர்த் தன்மை) தெரியும், உவர்மையும் (உப்புத் தன்மை) தெரியும்.
கடல் அனைத்தும் ஒரே தன்மைத்தான உவர் நீரே எனப் பார்வைக்குத் தோன்றும். மெய்நிலை அதுவல்ல. ஆற்றுவாய் தொடக்கம் நெடுங்கடல் வரை, கடலின் நீர்மை அல்லது உவர்மை படிப்படியாக மாறுகிறது.
நிலத்தை ஒட்டிய கடலோரக் கடலில், நிலத்திலிருந்து வடியும் நீர் - நன்னீர் - கடலுடன் கலக்கிறது. பனிப்பாறை உருகுவதால், மழை பெய்வதால் நிலத்தில் ஆறுகளாகும் நன்னீர், மலைகளிலிருந்து பள்ளத்துக்கு வந்து, கடற்கரைக்கு வந்து கடலுடன் கலக்கிறது. கடலுக்கு மேலேயே மழை பெய்கிறது.
கடலுள் உவர் நீர், நிலத்திலிருந்து வருவதோ நன்னீர். உவர் நீரில் உப்பின் கரைசல் அதிகம்; நன்னீரில் உப்பின் கரைசல் மிகமிகக் குறைவு.
மிகக் குறைந்த உவர்மை கொண்ட நன்னீரும் நாக்கில் கரிக்குமளவு உவர்மை செறிந்த கடல் நீரும் கலந்தால், கலக்கும் இடத்தில் கடலில் நீர்மை அதிகரிக்கும், உவர்மை குறையும். ஆனாலும் கடலின் கிடக்கை நீரோட்டம் இந்த நீர்மை நிறைந்த நீரை, உவர்மை நிறைந்த ஆழப் பகுதிக்குள் சேர்த்துவிடும்.
தொடர்ச்சியாக நன்னீர் கடலுக்குள் கலப்பதும், அந்த நன்னீரை ஆழ்கடலுள் கிடக்கை நீரோட்டம் எடுத்துச் செல்வதும் வழமை. இந்த வழமையால், கரையிலிருந்து படிப்படியாகக் கடல் நீரின் நீர்மை குறைய, உவர்மை அதிகரிக்கும். கரையோரத்தில் அதிக நீர்மை, ஆழ் கடலில் குறைந்த நீர்மை; படிப்படியாகக் குறையும் நீர்மை, ஆழ்கடலில் மாறாத அளவைக் கொண்டிருக்கும்.
எப்படி? ஏன்? கடலின் மேற்பரப்பிலிருந்து தொடர்ச்சியாகப் பகல்நேரம் முழுவதும் அதிக அளவிலும், இரவு நேரத்தில் குறைந்த அளவிலும் நீர் ஆவியாகிறது. சூரிய வெப்பமும், காற்றின் வெப்பமும் இந்த கடலின் மேற்பரப்பு நீரை ஆவியாக்குகின்றன.
ஒரு வழியால் நிலத்து நன்னீர் கடலுள் கரைகிறது. மறுவழியால் கடலின் நீர் ஆவியாகி வெளியேறுகின்றது. இந்த வரவு செலவுக் கணக்கில், வரவால் கடல் பெருகுவதுமில்லை, செலவால் கடல் வற்றுவதுமில்லை. கடலின் நீர்க் கொள்ளளவு மாறாதுள்ளது, கடலின் மட்டமும் மாறாதுள்ளது.
நிலத்து நன்னீருடன் மிகமிகச் சிறிய அளவில் உப்புக்கள் கடலுள் வருகின்றன. இந்த உப்புக்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஊட்டமாகின்றன. ஆனாலும் கடல் வாழ் உயிரினங்களின் உப்புத் தேவையை ஈடு செய்ய நிலத்திலிருந்து நீருடன் வரும் உப்பின் அளவு போதாது. தொடர்ச்சியாக ஆழ்கடலில் நடைபெறும் குத்து நீரோட்டம், கடலின் ஆழ் தரையிலிருந்து உப்புக் கரைசலை மேல் நோக்கி அள்ளிக்கொண்டு வருகின்றது. தொடர்ச்சியான இந்தக் கலக்கல் கடல் வாழ் உயிரினங்கலுக்கு ஊட்டமாக மட்டுமல்ல, நெடுங்கடலின் உவர்மையையும் மாறாது பேணுகின்றது.
100 கிராம் நீரில் 3.5 கிராம் உப்புக் கரைந்திருந்தால் 3.5% உவர்மை என்கிறோம், 96.5% நீர்மை என்கிறோம். நெடுங்கடலின் மாறாத நீர்மை 96.5%.
நிலத்திலிருந்து 99.999% நீர்மையுடன் கடலுக்குள் கலக்கும் நன்னீர், கரையோரக் கடலில், கழிமுகத்தில், களப்புக் கடலில் 99% -98% நீர்மையுடையதாகின்றது. வளைகுடாக் கடலிலோ விரிகுடாக் கடலிலோ 97% - 96% ஆகிறது. சிறுகடலிலோ, கடலிலோ 96.3% நீர்மையாகி, நெடுங்கடலுள் 96.5% நீர்மையுடன் நிலைக்கிறது.
கடற்கரையிலிருந்து கடலுள் போகப் போக, படிக்கட்டுகளாகக் குறையும் நீர்மை, நெடுங்கடலில் மாறாதிருக்கின்றது.
மழை பெய்கிறது, நிலத்து நீர் கடலுள் பாய்கிறது, கடலின் மேற்பரப்பு நீராவியாகிறது, இந்தச் சுழற்சியால் நெடுங்கடலின் நீர்மை 96.5% ஆக நிலைத்திருக்கிறது. கரையோரக் கடல்களில் 99% இலிருந்து 96.3% ஆகக் குறைந்து கொண்டிருக்கும் நீர்மை, நெடுங்கடலில் மாறாது 96.5% ஆக இருக்கிறது.
நெடுங்கடல் - கரையோரக் கடல்களல்லாத ஆழ்கடலான நெடுங்கடல்; உம் - மாறாத நீர்மை கொண்ட அத்தகைய கடலும் (உம்மை, நெடுங்கடலின் தனித்தன்மையைக் காட்டும்); தன் நீர்மை குன்றும் - தனது மாறாத நீர்மை அளவிலிருந்து குறையும், (96.5%நீர்மை குறைந்து 95% ஆகலாம்); தடிந்தெழிலி - கடலிலிருந்து நீராவியாகிக் காரான மழை மேகங்கள்; தான்நல்கா தாகி விடின் - நல் மழையைப் பொழியது விடின்.
2000 ஆண்டுகளுக்கு முன், தமிழில் கடலியல் கலைச் சொல்லான நீர்மையைத் தந்த திருவள்ளுவர், அறிவியல் கருத்தை அழகான குறள்வெண்பாவாக ஏழு சீர்களில் இரு வரிகளில் அமைத்துத் தந்துள்ளார்.
நெடுங்கடலுந் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான் நல்கா தாகிவிடின் குறள் 17.


0 Comments:

Post a Comment

<< Home