பயன்பாட்டுத் தமிழ்

Saturday, June 30, 2007

ஒலிபெயர்ப்பு - எழுத்துப்பெயர்ப்பு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Pioneer நாட்டவரை யவனர் எனத் தமிழாக்கியது சங்க காலம். யுவாங் சுவாங் தமிழில், அதே பெயர் சீனத்தில் வேறு உச்சரிப்பு. லக்ஷ்மணன் வால்மீகிக்கு, இலக்குவன் கம்பனுக்கு. Antony, Thomas போர்த்துக்கேயருக்கு, அந்தோனி, தோமையர் தமிழருக்கு. திருவல்லிக்கேணி உரோம வரிவடிவத்திலும் மேலையோர் உச்சரிப்பிலும் Triplicane ஆயது.
20ஆம் 21ஆம் நூற்றாண்டுகளில் உலகனைத்தும் உரோம வரிவடிவங்களின் மேலாட்சி. உரோம வரிவடிவங்களில் தத்தம் மொழியை எழுதும் மொழிகள் உலகில் பல.
தமிழரும் உலகெங்கும் பரந்து வாழத் தலைப்பட்டுளர். புகுந்த நாடுகள் பலவுள் உரோம வரிவடிவங்களே பயில, பழக, படிக்க உதவு கின்றன. உரோம வரிவடிவங்களையும் தமிழ் வரிவடிவங்களையும் ஒலிகளுக்கு ஏற்றவாறு பொருத்த அவர்க ளுட் பலர் முயன்று வருகின்றனர்.
உரோம வரிவடிவங்களைத் தமிழில் எழுதுவதற்கு எந்தச் சீர்மையும் இதுவரை ஏற்படவில்லை. Antonyயை அந்தோனி என்றும் அன்டனி என்றும் அன்ரனி என்றும் பல்வகையாக எழுதுவது போல, ஆங்கிலம் சார் உரோம வரிவடிவங்களை எழுந் தமானமாக அவரவர் விருப்பத்துக்கமைய எழுதி வருகின்றனர். ஐரோப்பாவில் புழக்கத்தில் உள்ள உரோம வரிவடிவங்களுக்கு உரிய தமிழ் ஒலிபெயர்ப்புகள் இக்காலத்தில் விரவியுள்ளன.
Germanyயைத் தமிழகத்தில் ஜெர்மனி, ஜேர்மனி, சேர்மனி, ஜர்மனி என அவரவர் விருப்புக்கும் அறிவுக்கும் வட்டார இயல்புக்கும் ஏற்றவாறு பெயர்த்தாலும், அண்மைக் காலத்தில் பெருமளவில் அந்நாட்டுக்குப் புலம் பெயர்ந்த தமிழர், அந்நாட்டு உரோம வரிவடிவம் அதற்கான ஒலி வடிவம் யாவையும் உளத்திருத்தி யேர்மனி என்றே தமிழாக்குவர்.
தமிழிலிருந்து உரோம வரிவடிவங்களுக்கு மாற்றுவதற்குச் சென் னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிக்கன் வழிகாட்டியுள்ளது. ஒவ்வொரு தமிழ் வரிவடிவத்திற்கும் ஏற்ற உரோம வரிவடிவம் இதுவே என வரையறுத்துக் காட்ட, அந்த வழிகாட்டல் புலமையாளரிடம் வழமையானது.
இந்த மாற்றங்கள் ஒருபுறமிருக்க, கணினித் தகவல் தொழினுட்பப் புரட்சி இந்தப் பயன்பாட்டை வேகமாக்கி உள்ளது. இரண்டு விரல்களால் எழுதியோர், பத்து விரல்களால் கணினி முன் அமர்ந்து எழுது கின்றனர்.
அவர்களுக்குத் தமிழ் லெக்சிக்கனின் வழிகாட்டல்கள் கிடைப்ப தில்லைப் போலும்! தெரிந்தவர்களுக்கும் ஒலிக்குறியீடுகள் கொண்ட எழுத்துருக்கள் கிடைப்பதில்லை.
எனவே, ஆங்கிலம் சார் உரோம வரிவடிவங்களின் பெரிய எழுத்துச் சின்ன எழுத்து வேறுபாடுகளைத் தமிழின் மயங்கொலிகளை வேறுபடுத்த எடுத்தாள்வர்.
இந்த முறையில் குறைபாடுகள் உண்டு என்பது மட்டுமல்ல, இவை சீரமைக்கப் படவுமில்லை.
இந்தச் சூழ்நிலையில் புதிதான ஒரு திட்டத்தைத் தமிழ்நெற்.கொம் (tamilnet.com) இணையதளம் வெளி யிட்டுள்ளது.
அடுத்த பக்கத்தில் நெடுங்கட்டம் 1இல் தமிழ் லெக்சிக்கன் முறை, நெடுங்கட்டம் 2இல் அறிவிக்கப்படாத ஒரு முறை, நெடுங்கட்டம் 3இல் தமிழ்நெற்.கொம் முறை, இவை காண்க.
ஐரோப்பிய, மலாய் மற்றும் உரோம வரிவடிவைத் தாங்கும் ஆபி ரிக்க, ஆசிய, அமெரிக்கக் கண்ட மொழிகளுக்கு உச்சரிப்பை அப்ப டியே கொண்டு செல்ல இந்த மூன்று வகையான ஒலிபெயர்ப்பு மாற்றங்களுள் எது சிறந்தது என்பது மட்டுமல்ல, எது தரமானது என்பதையும் அறிவிக்க வேண்டும்.
31 எழுத்துகளில் 12 எழுத்துகளை மூன்று வகையினரும் ஒரே மாதிரியாகக் கொண்டுளர். உயிர் நெடில்களுக்கும் மயங்கொலிகளுக்கும் எடுத்தாள்கின்ற வரிவடிவங்களில் முரண்களுண்டு.
ஒலிக்குறியீடுகள் சமகாலக் கணினி விசைப்பலகைகளுக்கு ஏற் றனவல்ல. ஒலிக்குறியீடு கொண்ட எழுத்துரு அனைவருக்கும் கிடைக்காது. இணையதள எழுத்துருக் கோவையிலும் அஃது அரிதாகவே உளது. விவிலியம் போன்ற இலத்தீன், கிரேக்கம் சார் நூல்கள் மட்டும் ஒலிக்குறியீடுகள் கொண்ட எழுத்துருவை இன்றும் கையாள்கின்றன. எனவே ஒலிக்குறியீடுகள் கொண்ட தமிழ் லெக்சிக்கன் முறையானது படிப்படியாக நீங்கி விடுமமா?
31 எழுத்துகளில் 24 எழுத்துகளை மற்றைய இரு வகையினரும் ஒரே மாதிரியாகக் கொண்டுளர். 7 எழுத்துகளுக்கு மட்டும் சீர்மை வகுத்து உலகெங்கும் இவைதாம் தரமான தமிழ் - உரோம ஒலிபெயர்ப்புக்கான வரிவடிவங்கள் என்ற அறிவித்தல் விரைந்து வரவேண்டும்.
மேற்கோள் குறியை நான்கு வரி வடிவங்களுக்கும் முக்காற்புள்ளிக் குறியை ஒரு வரிவடிவத்துக்கும் இடல் பொருத்தமா? பெரிய எழுத்துகளை எடுத்தாள்தல் பொருத்தமா? மயக்கமற்ற புரிதலுக்குத் துணை எது? விரைந்து பதில் காண்போம்.
1 2 3
அ a a a
ஆ Ê A,aa aa
இ i i i
ஈ Ø I, ee ee
உ u u u
ஊ ä U, oo oo
எ e e e
ஏ Ö E, ae, ea ea
ஐ ai ai ai
ஒ o o o
ஓ Ú O oa
ஔ au au, av au
ஃ k ah ’h
க ka ka ka
ங Üa nga nga
ச ca sa cha
ஞ æa gna gna
ட Ìa da da
ண àa Na ’na த ta tha tha
ந na na na
ப pa pa pa
ம ma ma ma
ய ya ya ya
ர ra ra, ta ra
ல la la la
வ va va va
ழ Þa zha zha
ள Îa La ’l
ற Èa Ra ’r/t
ன Ða na :n

Tuesday, May 02, 2006

ஓர் அடிமையின் வரலாறு

விழிப்புணர்வுக்காக மதிப்புரை எழுதியவர்:
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

பிரடெரிக்கு டக்கிளசு
தமிழினி வெளியீடு
176 பக்கங்கள், ரூ. 50
குட்டக் குட்டக் குனிபவன் மடையன் என்ற பழமொழிக்கமைய அடிமை கொள்ளும் முயற்சியை அதே வேகத்துடன் எதிர்க்கும் விடுதலைக் குரல்களும் இடைவிடாது ஒலிக்கின்றன.
உரிமைக்குப் பால் பேதமில்லை,
உண்மைக்கு நிறமில்லை
கடவுளின் குழந்தைகளான நாம் அனைவரும் உடன்பிறப்புகளே;
என்ற முகப்பு வரிகளுடன் கி.பி. 1847இல் அமெரிக்க மாநிலம் ஓன்றிலிருந்த வந்த இதழ் நோர்த் ஸ்ரார். இந்த இதழைத் தொடங்கி நடத்தியவர் பிரடெரிக்கு டக்கிளசு என்ற விடுதலைப் போராளி.
கி.பி. 1619 முதலாக வட அமெரிக்கக் கண்டத்தில் மனிதரை மனிதருக்கு அடிமையாக்குவது வழமையாயிற்று.
கி. பி. 1862இல் அடிமைகளின் விடுதலை அறிக்கையை அந்நாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் வெளியிடும் வரை, ஏறத்தாழ 250 ஆண்டுகள், சட்டபூர்வ அடிமைகளாக மனிதர், வட அமெரிக்காவில், சிறப்பாக அதன் தெற்கத்தைய மாநிலங்களில் வாழ்ந்தனர்.
அந்த அடிமைகளுக்கும் விலங்குகளுக்கும் உயிரற்ற நுகர்வுப் பொருள்களுக்கும் அசையாச் சொத்துகளுக்கும் வேறுபாடு இருக்கவில்லை. அந்த அடிமைகள் யாவரும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கைப்பற்றிக் கப்பலில் ஏற்றிய கறுப்பு நிறக் காப்பிலி இனத்தவர்.
ஆண்டாராக வெள்ளையர், அடிமைகளாகக் கறுப்பர்; சவுக்குகளாக வெள்ளையர், அடிவாங்கும் முதுகுகளாகக் கறுப்பர். சொகுசு வாழ்வில் போர்வைகள் புத்தாடைகளுடன் வெள்ளையர், குளிரிலும் வெயிலிலும் ஆடையின்றிக் கறுப்பர்.
வேலை வாங்கலாம், கசையடி கொடுக்கலாம், துன்புறுத்தலாலம், பசியுடன் வாட விடலாம், விற்கலாம், ஈடு வைக்கலாம், ஏலமிடலாம், அன்பளிப்பாகக் கொடுக்கலாம், பண்ட மாற்றாக்கலாம். சட்டம் துணைநின்றது. வெள்ளையருக்கு மேல்நிலை, கறுப்பருக்கு இழிநிலை.
கல்வியூட்டலாகாது, தொழிற்பயிற்சி கூடாது, தத்துவப் போதனை தேவையில்லை, கேளிக்கை கிடையாது. வேலை...., வேலை...., விடுப்பில்லா வேலை அதற்குக் கூலி கிடையாது, அரை வயிற்றுக்குக் கஞ்சி, ஆண்டுக்கு இரு ஆடைகள், படுக்கப் போர்வையுமில்லை.
வட அமெரிக்காவின் தெற்கத்தைய மாநிலங்களின் வேளாண் பண்ணைகளில் இந்தக் கொடுமை, ஆனால் வட மாநிலங்களில் இக் கொடுமை குறைவு; சட்டமோ எங்கும் ஒன்றுதான்.
வெள்ளை ஆண்டானும் கறுப்புப் அடிமைப் பெண்ணும் பாலுறவு கொள்ளப் பிறந்தவர் பிரடெரிக்கு. மிகச் சிறு வயதிலேயே தாயைப் பிரிந்தவர், தந்தையைத் தெரியாதவர், வளர்ப்புப் பாட்டியுடன் வளர்ந்தவர். அடிமைக் கொட்டிலுக்குள் நடந்த அத்தனை அநியாயங்களுக்கும் சாட்சி.
இளைஞனாகு முன்பே பலமுறை கசையடி வாங்கி முதுகுத் தோலுரிந்தவர், உருட்டுக் கட்டை அடியில் இவரது மண்டை பிளந்தது, இடது கண் தேய்ந்தது, மாட்டிறைச்சித் துண்டால் கண்ணுக்கு மருத்துவம் செய்தவர்.
பண்ணையிலிருந்து மாற்றலாகி நகரக் குடும்பத்துக்கு அடிமையான விடலைப் பருவத்தில் களவாக எழுத்துகளை அறிந்தார், எழுதப் பழகினார், செய்தி இதழ்களைப் படித்தார், நூல்களைப் படித்தார், கிறித்தவ தத்துவத்தைப் படிக்க முயன்றார்.
அடிமை வாழ்வை வெறுத்தார், விடுதலை பெற்ற மனிதனாக முயன்றார், நண்பர்களுடன் விடுதலையாக முயன்று கைதானார், சிறையிருந்தார், பின்னர் தன்னந் தனியாகத் தப்பியோடி தெற்கத்தைய மாநிலங்களிலிருந்து நியுயோர்க்கு வந்தார். அங்கும் அவருக்குச் சோதனைகள்.
பண்ணையில் இருந்த நாள்களில் காதலித்த கறுப்பினப் பெண்ணை நியூயோர்க்குக்கு வரவழைத்துத் திருமணம் செய்து கொண்டார். ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையானார். நீண்ட காலம் இல்லறம் நடத்திய அவர், பிற்காலத்தில் நோயுற்ற மனைவி இறந்ததும் வெள்ளைக்காரப் பெண்ணை மணந்தார்.
சோதனைகளை மீறி, தன்னையொத்த விடுதலை வேட்கையாளருடன் சேர்ந்தார், நிறைய வாசித்தார், சிறந்த பேச்சாளராரனார், நிறைய எழுதினார், நோர்த் ஸ்ரார் இதழைத் தானே நடத்தினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆபிரகாம் லிங்கனின் வெற்றிக்காக உழைத்தார். அடிமைகள் விடுதலை அறிக்கை வெளியாவதில் ஆபிரகாம் லிங்கனுக்கு உதவினார். 250 ஆண்டு கால அடிமைச் சட்டங்களைத் தகர்த்தெறிவதில் சக போராளிகளுடன் இணைந்த பிரடெரிக்கு டக்கிளசுவின் பங்களிப்பைப் பல நுல்கள் எழுதின, பாராட்டின.
கறுப்பின மக்கள் விடுதலை பெற்றது மட்டுமல்ல, வாக்குரிமை பெற்றனர், படையணிகளில் இணைந்தனர்.
இந்தப் போராளி, தனது இளமைக்கால அநுபவங்களை நூலாக்கினார். அந்த நூலே ஓர் அடிமையின் வரலாறு என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. சூத்திரதாரி மொழிபெயர்த்துள்ளார். தமிழினி வெளியிட்டுள்ளனர். இந்த நூலைத் தமிழில் வெளியிட ஊக்குவித்தவர் திலீப்குமார்.
தமிழர் அனைவரும் படிக்கவேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று. திண்ணியத்தில் மலத்தை ஊட்டிய, தஞ்சாவூரருகே சிறுநீரை ஊட்டிய, குவளைகள் இரண்டைக் கடையில் தனித்தனி வைத்திருக்கிற தமிழகத்திலும், கோயிலுக்குள் வழிபடப் புகமுடியா மக்கள் இன்னமும் வாழும் ஈழத்திலும் இந்த நூல் அத்தகைய கொடுமையாளரின் கண்களைத் திறக்கக் கூடும். பிறப்பொக்கும் என வள்ளுவர் சொன்னதைக் கேட்காதவரின் இரத்தமும் உறையும் நிகழ்வுகளை பிரடெரிக்கு இந்த நூலில் விவரித்துள்ளார்.
மனிதரின் மிகக் கேவலமான இயல்புகளின் வெளிப்பாடுகளை அமெரிக்காவில் 150 ஆண்டுகளின் முன்னர் சட்டத்தின் துணை கொண்டு நிகழ்த்திய வரலாறு, வருணாசிரம நெறிகளுக்கு அப்பாற்பட்டதல்ல. நிற(வருண)பேதத்தின் கொடுமைகளைப் பல்லாயிரமாண்டுகளாக அனுபவித்து வரும் தெற்காசிய மக்கள், வட அமெரிக்காவில் 250 ஆண்டுகள் நடந்த கொடுமைக்கு முடிவு கட்டியதை எடுத்துக்காட்டாக்க வேண்டும். இந்த நூல் அதற்கு உதவும்.
ஆங்கில வாசகரை நோக்கிக் கடந்த நூற்றாண்டில் எழுதிய நூல். விரைந்து படிக்கக் கூடியதாகத் தமிழ் நடை அமைந்து, சிறு சிறு பந்திகளாக வாசித்துப் பழகி வரும் இக்காலத் தமிழ் வாசகருக்கு, மொழிபெயர்ப்பாளரின் நீண்ட பந்திகள் பொறுமையைச் சோதிப்பன. பெயர்ச் சொல் ஒலிபெயர்ப்பில், வாக்கிய மொழியியலில், உரை நடையில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம். மணிப்பிரவாளத்தைத் தூக்கி எறிந்த தமிழர், தமிங்கிலத்தைத் தூக்கி எறிவதில் காலத்தை விரயமாக்கில் வளர்ச்சியில் பின் தங்குவர். மணிப்பிரவாளமும் தமிங்கிலமும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடுகள்.
மனித உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்க மாநில அரசுகளுக்கு அடித்தளமில்லை. அனைத்துலகையும் ஆங்கிலேய வெள்ளையரின் மேலாதிக்கத்துள் கொண்டுவருவதற்கு இன்றைய உலகமயமாக்கல் போர்வையாகிறது. இந்த நூல் அந்தப் பின்னணியைத் தெளிவாக்குகிறது.

நீர்மையும் உவர்மையும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கண்ணீரை நாக்கில் விட்டுப் பாருங்கள். உப்பு உறைக்கும். வியர்வையிலும் உப்பு உண்டு.
கடல் நீரிலும் உப்பு உண்டு. கடல் நீர் உப்பாக இருப்பதன் காரணம் என்ன? சிங்கள மேலாட்சியின் கொடுமைகளைத் தாங்காத ஈழத்தமிழர் வடித்த கண்ணீர் கடலில் கலந்ததால், கடல் நீர் உப்பாக உள்ளதாம்; சொன்னவர் அறிஞர் அண்ணா. இலக்கிய நயத்துடன் கூறிய இவ் வரிகள், தன் உடன் பிறப்புகளின் எல்லையற்ற கடும் துன்பத்தை விளக்க அறிஞர் அண்ணா கூறிய வரிகள்.
கடல் நீரைச் சூடாக்கினால் நீர் ஆவியாகும்; உப்பு எஞ்சி நிற்கும். கோடை காலத்தில், கடற்கரை அருகே, வரப்புகளை அமைத்து, வயல்களாக்கி, அதற்குள் கடல் நீரை இறைத்து, சூரிய வெப்பத்தில் காய விட்டால், நீர் ஆவியாகும்; வயல் முழுவதும் உப்புப் படியும்; உப்பளங்களில் இவ்வாறு உப்பை விளைவிக்கிறார்கள்.
உலகின் மொத்தப் பரப்பளவில் 77% கடற் பரப்பு. எஞ்சியதே நிலப் பரப்பு. நிலத்திலிருந்து படிப்படியாக ஆழம் அதிகரித்து, மிக ஆழமான பகுதிகளைக் கொண்டதே கடல்.
கரையோரக் கடல் ஆழம் குறைந்தது, நெடுங்கடல் ஆழம் நிறைந்தது.
கரையோரக் கடலும் பல்வகையின. நிலத்தில் ஒறுவாய் ஏற்பட, கடல் நீர் உள்புகும். நிலத்திலிருந்து வடியும் நீரும் அந்த ஒறுவாயுள் சேரும். இத்தகையனவற்றை, ஆற்றுவாய் எனவும், கழிமுகம் எனவும், களப்பு எனவும், கடனீரேரி எனவும், குடாக்கடல் எனவும், உட்கடல் எனவும் பல்வேறு பெயரிட்டு அழைப்பர்.
அருகருகே உள்ள நிலப்பரப்புகள்; அந்த நிலப்பரப்புக்கு இடையே ஆழம் குறைந்த கடல்; நீரால் இணைக்கப்பெற்ற நிலப்பரப்புகள்; அந்தக் கடலை நீரிணை என்பர், கால்வாய் என்பர். இந்தியாவின் பெரிய நிலப்பரப்பு, தெற்கே இலங்கைத் தீவு; இந்திய நிலப்பரப்புக்குத் தென்கிழக்கே, இலங்கைத் தீவுக்கு வடமேற்கே, ஆழமற்ற கடல் இரு நிலப்பகுதிகளையும் இணைக்கிறது. அந்தக் கடலே பாக்கு நீரிணை. பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஒடுங்கும் கடல் ஆங்கிலக் கால்வாய்.
நெடுங்கடலுடன் ஒரு திக்கில் குறுகிய, ஆனால் நேரடித் தொடர்புடைய, ஏனைய மூன்று திக்குகளும் நிலப்பரப்பு வளைத்துள்ள கடல், வளைகுடா. தூத்துக்குடிக் கரை அல்லது கீழக்கரை மேற்காக, சேதுத் திடல் தொடர் வடக்காக, இலங்கையின் புத்தளம் - கற்பிட்டிக் கரையோரம் கிழக்காக வளைந்து, தெற்கே இந்தியப் பெருங்கடலுடன் நேரடித் தொடர்புள்ள குடாக் கடல், மன்னார் வளைகுடா. அவ்வாறே பாரசீக வளைகுடா, மெக்சிகன் வளைகுடா போன்றன.
பரப்பளவில் பெரியதாய், அகன்று விரிந்த திக்கில் நெடுங்கடலுடன் நேரடித் தொடர்புடையதாய், எஞ்சிய திக்குகள் நிலப்பரப்பை ஒட்டியதாய் உள்ள கடல் விரிகுடா. இந்தியத் துணைக்கண்டம் மேற்கே, மலாயாக் குடாநாடு கிழக்கே, இந்தியப் பெருங்கடலுள் விரியும் கடலே வங்காள விரிகுடா. அவ்வாறே பிஸ்கே விரிகுடா போன்றன.
பரப்பளவில் பெரியதாய், ஆழத்தில் அதிகமாய், நிலப்பகுதிகளை ஒட்டியும் நெடுங்கடலோடு நேரடித் தொடர்புடையதான பரந்த, விரிந்த நீர்த்தொகுதியே கடல்; இதனைச் சிறுகடல் என்பாரும் உண்டு. இந்தியாவுக்கு மேற்கே, அரேபியக் குடாநாட்டுக்குக் கிழக்கே உள்ளது அரபிக் கடல். அவ்வாறே அந்தமான் கடல், பிலிப்பைன்ஸ் கடல் போன்றன.
ஆற்றுவாய் தொடங்கி, சிறுகடல் ஈறாக உள்ள நீர்த் தொகுதிகளுக்குத் தாயான நீர்த்தொகுதியே நெடுங்கடல். உலகின் பரப்பில் நான்கு நெடுங்கடல்கள் உள. அவற்றைப் பெருங்கடல் என இன்று அழைப்போம். இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அத்திலாந்திக் பெருங்கடல், ஆர்க்ரிக் பெருங்கடல் என்பன அவை.
ஆழம், இருக்குமிடம், பரப்பு, விரிவு போன்ற தன்மைகளில் வேறுபடுவதால் வெவ்வேறு பெயர்கள். ஆனாலும் ஒரே இயல்பான உப்புத்தன்மை கொண்ட நீரே இந்த நீர்த் தொகுதிகளில் உள்ள நீர்.
கடலில் உப்பும் உண்டு, நீரும் உண்டு, இவை இரண்டும் வேறறக் கலந்துள்ளன. ஆனாலும் கடலை உப்பு என யாரும் அழைப்பதில்லை. கடலை நீர் எனவே அழைப்பர். ஏனெனில் கடலில் கண்ணுக்கு நீர் தெரிகிறது, கரைந்த உப்புத் தெரிவதில்லை. நாக்கில் கடல் நீரை விட்டால், நீர்மையும் (நீர்த் தன்மை) தெரியும், உவர்மையும் (உப்புத் தன்மை) தெரியும்.
கடல் அனைத்தும் ஒரே தன்மைத்தான உவர் நீரே எனப் பார்வைக்குத் தோன்றும். மெய்நிலை அதுவல்ல. ஆற்றுவாய் தொடக்கம் நெடுங்கடல் வரை, கடலின் நீர்மை அல்லது உவர்மை படிப்படியாக மாறுகிறது.
நிலத்தை ஒட்டிய கடலோரக் கடலில், நிலத்திலிருந்து வடியும் நீர் - நன்னீர் - கடலுடன் கலக்கிறது. பனிப்பாறை உருகுவதால், மழை பெய்வதால் நிலத்தில் ஆறுகளாகும் நன்னீர், மலைகளிலிருந்து பள்ளத்துக்கு வந்து, கடற்கரைக்கு வந்து கடலுடன் கலக்கிறது. கடலுக்கு மேலேயே மழை பெய்கிறது.
கடலுள் உவர் நீர், நிலத்திலிருந்து வருவதோ நன்னீர். உவர் நீரில் உப்பின் கரைசல் அதிகம்; நன்னீரில் உப்பின் கரைசல் மிகமிகக் குறைவு.
மிகக் குறைந்த உவர்மை கொண்ட நன்னீரும் நாக்கில் கரிக்குமளவு உவர்மை செறிந்த கடல் நீரும் கலந்தால், கலக்கும் இடத்தில் கடலில் நீர்மை அதிகரிக்கும், உவர்மை குறையும். ஆனாலும் கடலின் கிடக்கை நீரோட்டம் இந்த நீர்மை நிறைந்த நீரை, உவர்மை நிறைந்த ஆழப் பகுதிக்குள் சேர்த்துவிடும்.
தொடர்ச்சியாக நன்னீர் கடலுக்குள் கலப்பதும், அந்த நன்னீரை ஆழ்கடலுள் கிடக்கை நீரோட்டம் எடுத்துச் செல்வதும் வழமை. இந்த வழமையால், கரையிலிருந்து படிப்படியாகக் கடல் நீரின் நீர்மை குறைய, உவர்மை அதிகரிக்கும். கரையோரத்தில் அதிக நீர்மை, ஆழ் கடலில் குறைந்த நீர்மை; படிப்படியாகக் குறையும் நீர்மை, ஆழ்கடலில் மாறாத அளவைக் கொண்டிருக்கும்.
எப்படி? ஏன்? கடலின் மேற்பரப்பிலிருந்து தொடர்ச்சியாகப் பகல்நேரம் முழுவதும் அதிக அளவிலும், இரவு நேரத்தில் குறைந்த அளவிலும் நீர் ஆவியாகிறது. சூரிய வெப்பமும், காற்றின் வெப்பமும் இந்த கடலின் மேற்பரப்பு நீரை ஆவியாக்குகின்றன.
ஒரு வழியால் நிலத்து நன்னீர் கடலுள் கரைகிறது. மறுவழியால் கடலின் நீர் ஆவியாகி வெளியேறுகின்றது. இந்த வரவு செலவுக் கணக்கில், வரவால் கடல் பெருகுவதுமில்லை, செலவால் கடல் வற்றுவதுமில்லை. கடலின் நீர்க் கொள்ளளவு மாறாதுள்ளது, கடலின் மட்டமும் மாறாதுள்ளது.
நிலத்து நன்னீருடன் மிகமிகச் சிறிய அளவில் உப்புக்கள் கடலுள் வருகின்றன. இந்த உப்புக்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஊட்டமாகின்றன. ஆனாலும் கடல் வாழ் உயிரினங்களின் உப்புத் தேவையை ஈடு செய்ய நிலத்திலிருந்து நீருடன் வரும் உப்பின் அளவு போதாது. தொடர்ச்சியாக ஆழ்கடலில் நடைபெறும் குத்து நீரோட்டம், கடலின் ஆழ் தரையிலிருந்து உப்புக் கரைசலை மேல் நோக்கி அள்ளிக்கொண்டு வருகின்றது. தொடர்ச்சியான இந்தக் கலக்கல் கடல் வாழ் உயிரினங்கலுக்கு ஊட்டமாக மட்டுமல்ல, நெடுங்கடலின் உவர்மையையும் மாறாது பேணுகின்றது.
100 கிராம் நீரில் 3.5 கிராம் உப்புக் கரைந்திருந்தால் 3.5% உவர்மை என்கிறோம், 96.5% நீர்மை என்கிறோம். நெடுங்கடலின் மாறாத நீர்மை 96.5%.
நிலத்திலிருந்து 99.999% நீர்மையுடன் கடலுக்குள் கலக்கும் நன்னீர், கரையோரக் கடலில், கழிமுகத்தில், களப்புக் கடலில் 99% -98% நீர்மையுடையதாகின்றது. வளைகுடாக் கடலிலோ விரிகுடாக் கடலிலோ 97% - 96% ஆகிறது. சிறுகடலிலோ, கடலிலோ 96.3% நீர்மையாகி, நெடுங்கடலுள் 96.5% நீர்மையுடன் நிலைக்கிறது.
கடற்கரையிலிருந்து கடலுள் போகப் போக, படிக்கட்டுகளாகக் குறையும் நீர்மை, நெடுங்கடலில் மாறாதிருக்கின்றது.
மழை பெய்கிறது, நிலத்து நீர் கடலுள் பாய்கிறது, கடலின் மேற்பரப்பு நீராவியாகிறது, இந்தச் சுழற்சியால் நெடுங்கடலின் நீர்மை 96.5% ஆக நிலைத்திருக்கிறது. கரையோரக் கடல்களில் 99% இலிருந்து 96.3% ஆகக் குறைந்து கொண்டிருக்கும் நீர்மை, நெடுங்கடலில் மாறாது 96.5% ஆக இருக்கிறது.
நெடுங்கடல் - கரையோரக் கடல்களல்லாத ஆழ்கடலான நெடுங்கடல்; உம் - மாறாத நீர்மை கொண்ட அத்தகைய கடலும் (உம்மை, நெடுங்கடலின் தனித்தன்மையைக் காட்டும்); தன் நீர்மை குன்றும் - தனது மாறாத நீர்மை அளவிலிருந்து குறையும், (96.5%நீர்மை குறைந்து 95% ஆகலாம்); தடிந்தெழிலி - கடலிலிருந்து நீராவியாகிக் காரான மழை மேகங்கள்; தான்நல்கா தாகி விடின் - நல் மழையைப் பொழியது விடின்.
2000 ஆண்டுகளுக்கு முன், தமிழில் கடலியல் கலைச் சொல்லான நீர்மையைத் தந்த திருவள்ளுவர், அறிவியல் கருத்தை அழகான குறள்வெண்பாவாக ஏழு சீர்களில் இரு வரிகளில் அமைத்துத் தந்துள்ளார்.
நெடுங்கடலுந் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான் நல்கா தாகிவிடின் குறள் 17.


உணவின் தீ அளவு தெரிந்துண்க

ஒரு கிராம் நீர். அதை ஒரு பாகை செல்சியசு உயர்த்த வேண்டும். அதற்கு எவ்வளவு தீ வேண்டும்? ஒரு குக்கலோரி தீ போதுமானது.
30 பாகை செல்சியசில் உள்ள ஒரு கிராம் நீரை 100 பாகை செல்சியசுக்கு உயர்த்தி நீராவியாக்க 70 குக்கலோரி தீ வேண்டும்.
தீயை அளக்கும் அலகு குக்கலோரி.
ஓராயிரம் குக்கலோரி தீ சேர்ந்தால், ஒரு கலோரி.
தீயின் அளவைப் பார்த்தோம். சத்தியின் வெளிப்பாடு தீ. வலிமையின் வெளிப்பாடு தீ. ஆற்றலின் வெளிப்பாடு தீ. அந்த ஆற்றலை அளக்கும் அலகு கலோரி.
உணவில் இருந்து ஆற்றலை உடல் பெறுகிறது. உணவில் ஆற்றல் தோன்றாதிருக்கிறது. குடலுக்குள் போனதும் உணவு செரிமானமாகிறது. செரிமானமான பின்னர் உடலின் தேவைக்காகப் செரிமான உணவை மூச்சு வாயு உடைக்கிறது. ஆற்றல் வெளிவருகிறது. அந்த ஆற்றலே உயிரை வாழ்விக்கிறது.
உணவுக்குள் இருக்கும் தோன்றா ஆற்றலை மூச்சு வாயு உடைத்துத் தோன்றும் ஆற்றலைக் கொடுப்பதால் உயிர் வாழ்கிறது.
உயிர் வாழ ஆற்றல் தேவை. எனவே மூச்சு வாயு தேவை, உணவும் தேவை.
உணவில் உள்ள ஆற்றலை அளக்கும் அலகு கலோரி.
தூங்கும் போதும் ஆற்றல் தேவை, உழைக்கும் போதும் ஆற்றல் தேவை. ஒவ்வொரு நிலையிலும் எவ்வெவ்வளவு ஆற்றல் தேவை என்பதைக் கணக்கிடலாம்; ஒரு மனிதருக்கு ஒரு மணி நேரத்துக்கு எத்தனை கலோரி ஆற்றல் தேவை எனக் கணக்கிடலாம்.
தூங்குகையில்... 80
உட்கார்ந்திருக்கையில்... 100
வீட்டு வேலைகளே செய்கையில்... 180
மெதுவாக நடக்கையில்... 220
வேகமாக நடக்கையில்... 480
ஓடுகையில்... 1000
மெதுவாக ஓடுகையில்... 600
மெதுவாக ஈருருளி ஓட்டுகையில்... 360
வேகமாக ஈருருளி ஓட்டுகையில்... 540
மெதுவாக நீந்துகையில்... 300
வேகமாக நீந்துகையில்... 400
பூப்பந்து விளையாடுகையில்.. 350
மேசைப் பந்து விளையாடுகையில்.. 360
இதற்கேற்ற உணவுதான் உயிர் வாழத் தேவை. எனவே நமக்குக் கிடைக்கும் உணவு வகைகள் ஒவ்வொன்றிலும் எத்தனை கலோரி இருக்கிறது எனத் தெரிந்து கொண்டால், அதற்கேற்ப அளவாக நாம் உணவை உட்கொண்டால், நலமாக உயிர் வாழலாம். ஒரு கிலோ உணவில் எத்தனை கலோரி எனத் தெரிந்தால் அதற்கமையத் தேர்ந்து சமைக்கலாம், உட்கொள்ளலாம்.
தானிய வகைகள் - அரிசி, கோதுமை போன்றன... 3,500
பருப்பு வகைகள் - துவரை, பயறு, மூக்குக் கடலை போன்றன... 3,500
காய்கறி - கத்தரி, வெண்டை, பாவல், அவரை போன்றன... 1,000
காய்கறி - கெக்கரி, தக்காளி போன்றன.. 200
காய்கறி - கீரை வகைகள்.. 300
பழங்கள் - 800
இறைச்சி வகைகள்.. 2,000
பால், பால் தரும் பொருள்கள்... 700
சமையல் எண்ணெய் வகைகள்... 9,000
உணவின் ஆற்றல் அளவுகளைக் கண்டோம். உயிர் வாழத் தேவையான ஆற்றல் அளவுகளையும் கண்டோம்.
அளவோடு உணவை உட்கொண்டால் வளமாக நலமாக வாழலாம்.
உணவில் உள்ள ஆற்றலின் அளவை, தீயின் அளவை, கலோரியின் அளவைத் தெரிந்து ஒருவர் உணவுண்ண வேண்டும். அந்த அளவைக் கவனத்தில் கொள்ளாமல், அளவுக்கு மேலாக ஒருவர் உணவை உட்கொண்டால், உணவுக் குழாயில், குருதி ஓட்டத்தில், இதயத்தில், சிறுநீரகத்தில், ஈரலில், உடலின் பிற உள்ளுறுப்புகளில் சம காலத்தில் நோய்கள் வரும். உடலின் எடை தேவைக்கு அதிகமாக உயரும்.
கலோரியின் அளவைத் தெரிந்து அளவோடு உண்ணுங்கள் என 2000ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவப் பெருந்தகை கூறிச் சென்றுள்ளார். மேலே கூறிய மிக விளக்கமான அறிவியல் கொள்கையை இரண்டே வரிகளில், ஏழே ஏழு சீர்களுள் அடக்கி, குறள் வெண்பாவாகத் தந்துள்ளார்.
தீ அளவன்றித் தெரியான் - கலோரி அளவுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாது, பெரிதுண்ணின் - தேவையான கலோரிக்கு மேலாக உணவை உண்ணும் ஒருவர், நோயளவின்றி - உடலின் அனைத்து உறுப்புகளிலும் எண்ணற்ற நோய்கள் வந்து, படும் - துன்புறுவர், இறப்பர்.
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும் -குறள் 947

Wednesday, October 26, 2005

உலகத் தமிழருக்குப் பண்பாட்டுச் சாளரம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
செட்டிநாட்டுக்கு விழா ஒன்றுக்குப் போயிருந்தேன். திருமயத்துக்கு அருகே இராமச்சந்திரபுரத்தில் ஒரு வீட்டில் தங்கினேன். அது வீடல்ல, மாளிகை. இருபதுக்கும் அதிகமான அறைகள். நாற்சார முற்றங்கள் மூன்று. பல அடுக்களைகள். மாளிகையின் நான்கு சுவர்களும் நான்கு தெருக்களை ஒட்டி இருந்தன. மாளிகையில் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும் இருந்தார். ஆண்டுக்கு ஒருமுறையே உரிமையாளரான நகரத்தார் இல்லத்தவர் அங்கு வருவார்களாம்.
யாழ்ப்பாணம் சிவன்கோயில் மேற்கு வீதியில் அரிசிமண்டி நடத்திய வணிகரான நகரத்தார் கட்டிய மாளிகையே அது. பர்மாவில் இருந்து அரிசியை இறக்கி இலங்கை முழுவதும் விற்பனை செய்தவர் அவ்வணிகர். மாளிகை மரவேலை முழுவதும் பர்மாத் தேக்கு. வரவேற்பு அறையின் அலங்காரம் முழுவதும் ஐரோப்பியக் கலைவண்ணம்.
செட்டிநாடு முழுவதுமே இத்தகைய பல மாளிகைகளைக் காணலாம். சைகோன், சிங்கப்பூர், பினாங்கு, ரங்கூன், மண்டலே, யாழ்ப்பாணம், கொழும்பு எனத் தென்கிழக்காசியாவின் வணிகத்தில் பல நூற்றாண்டுகாலமாகப் பங்காற்றி வருபவர்கள் நகரத்தார்கள்.
அவர்கள் கொணர்ந்த செல்வமும் சொத்தும் அயலகப் பழக்க வழக்கங்களும் ஏராளம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் எனத் தொடங்கிக் கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், திருக்கோயில் திருப்பணிகள் எனப் பல்துறை அறக் கொடைகளால் தமிழகம் பயன்பெற்றது. மாதாந்த உண்டியல் வருகையால் பல குடும்பங்கள் செழித்தன.
முப்பது பழந்தமிழ் நூல்களைத் தனிஒருவரின் முயற்சியாகப் பதிப்பித்த ஆறுமுக நாவலரும், தொல்காப்பியம், கலித்தொகை உள்ளிட்ட 11 நூல்களை முதன்முதலில் அச்சுவாகனம் ஏற்றிய சி. வை. தாமோதரனாரும் தமிழகத்தின் பண்பாட்டுச் செல்வத்துக்குக் காலந்தோறும் உரமூட்டி வருவோர் வழிவந்த ஈழத் தமிழ் மரபினர். சிங்கப்பூர் கோவிந்தசாமியும் மலேஷிய முரசு மாறனும் யாழன் சண்முகலிங்கமும் கணிப்பொறித் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பால் தமிழகம் பயன்பெற்று வருகிறது.
நகரத்தாரின் நீண்ட காலப் புலம்பெயர் வணிகம், ஆங்கிலேயர் காலத் தமிழ்த் தொழிலாளர் புலம்பெயர்வுகள், எண்ணெய்ச் செல்வம் ஈர்த்த அண்மைக் காலத் தமிழர் புலம்பெயர்வுகள், ஈழப்போரினால் அகதிகளாய்ப் புலம் பெயர்வுகள் யாவும் திரைகடலோடித் திரவியம் தேடிவர வழிவகுத்தன.
தமிழகக் கரைகளுக்கு வெளியே தமிழர் தொடர்ந்தும் தமிழராக வாழ்வது எளிதானதல்ல. மலாக்காச் செட்டிகளும், கொழும்புச் செட்டிகளும் தமிழை மறந்து, தமிழராக வாழ்வதை மறந்து, புகுந்த மண்ணுடனும் பண்பாட்டுடனும் ஐக்கியமாகினர். பிஜி, மொரிசியசு, தென் ஆபிரிக்கா, சீசெல்சு, பிரான்சு, இறியுனியன், சுரிநாம், ஆகிய நாடுகளுக்கு ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் அழைத்துச் சென்ற தமிழர், தமிழ் மொழியைப் பேச எழுத மறந்த தமிழராக வாழ்ந்து வருகிறார்கள். பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குக் ஆங்கிலேயருடன் சென்ற தமிழர் மட்டும் தமிழை மறக்காமல் பண்பாட்டையும் மறக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். அண்மைக் காலங்களில் ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் புலம்பெயர்ந்த தமிழக, மற்றும் ஈழத் தமிழர்களின் சந்ததியினர் தமிழர்களாகத் தொடர்வார்களா? அன்றி அந்தந்த மண்ணுடன் ஐக்கியமாகிவிடுவார்களா? இதைக் காலம் தான் உணர்த்தும்.
தம் தாய் நாட்டை விட்டுப் புலம்பெயர்பவர்கள் தமிழர் மட்டும்தான் அல்ல. கடந்த 500 ஆண்டுகளில் அதிகம் புலம்பெயர்ந்தவர்கள் அராபியர்களும் ஐரோப்பியர்களுமே. வணிகத்துக்காவும் நாடு பிடிக்கவும் இவர்கள் கடலாடினர்
தங்கள் மொழிகளையும் மரபுகளையும் எடுத்துச் சென்ற இவர்கள், சென்ற இடங்களில் அவற்றைப் பேணியதுடன் மற்றவர்கள் மீதும் திணித்தார்கள். 58 நாடுகளில் ஆங்கிலம் வழங்குகிறது. 46 நாடுகளில் பிரஞ்சு வழங்குகிறது. 24 நாடுகளில் ஸ்பானிய மொழி வழங்குகிறது. 24 நாடுகளில் அரபுமொழி வழங்குகிறது. டானிஷ், டச்சு, இத்தாலி, போத்துக்கேயம் ஆகியவை சில நாடுகளில் வழங்குகின்றன.
அடையாள உணர்வுத் தேடலுக்கும் பாதுகாப்புக்கும் மொழியும் பண்பாடும் முக்கியம் என்பதால், புலம்பெயர்ந்து வாழும் அமெரிக்க, ஐரோப்பியரைத் தத்தம் தாய்ப்பண்பாட்டுடன் ஈர்த்துப் பிணித்து வைக்கவும், சேர்ந்த நாட்டின் பண்பாட்டுடன் ஐக்கியமாகி விடாமல் இருக்கவும் ஐரோப்பிய அரசுகளின் சிறந்த அடித்தள அமைப்புகள் செயற்படுகின்றன.
தமிழர் விட்டு வந்த மலாக்காச் செட்டிகள் போன்றோரே ஆங்கிலோ இந்தியர். இத்தகைய கலப்பினர் பல நாடுகளில் உளர். எனினும் அவர்கள் ஐரோப்பிய மொழி-பண்பாட்டினைத் தொடரத் தேவையான அமைப்புகளை ஐரோப்பிய அரசுகள் அமைத்துள.
அல்லயன்ஸ் பிரஞ்சைஸ், அமெரிக்கத் தகவல் நடுவம், பிரிட்டிஷ் கவுன்சில், போன்ற அமைப்புகள் உலகெங்கும் உள்ளன. அவை இல்லாத நாடுகளில் அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் அப்பணியைச் செய்கின்றன.
ஏடனில் நான் தங்கியிருந்தபொழுது பிரிட்டிஷ் தூதரகம், தம் நூலகத்தைப் பயன்படுத்துமாறும், வாரம் ஒருநாள் இலண்டனில் இருந்து வரும் திரைப்படத்தைப் பார்க்க வருமாறும் நிலையான அழைப்பை எனக்குத் தந்ததற்கு ஒரே காரணம் நான் ஆங்கிலமொழியைத் தெரிந்தவன் என்பதுதான். ஏனெனில் ஏடனில் அப்பொழுது கம்யூனிச அரசு இருந்தது. ஆங்கிலப் படங்களை வெளியே பார்க்க முடியாது. அங்குள்ள ஆங்கிலேயர், அமெரிக்கர், ஆங்கிலம் தெரிந்த ஆபிரிக்கர், ஆகியோர் பார்க்கும் வசதிக்காக, பிரிட்டிஷ் அரசு வாரம் தோறும் ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை விமானத்தில் அனுப்பும், இலண்டனில் வெளியாகும் நாளிதழ்கள், செய்தி இதழ்கள், நூல்கள் ஆகியவற்றையும் பிரிட்டிஷ் அரசு அனுப்பும்.
ஆங்கிலேயர் எங்கு புலம்பெயர்ந்தாலும் ஆங்கில மொழி - பண்பாட்டுடன் வாழ்வதையும் அடையாள உணர்வு போய்விடாமல் பாதுகாப்பதையும் தனது கடமையாக பிரிட்டிஷ் அரசு நினைப்பதன் நீட்டமே பிரிட்டிஷ் கவுன்சிலின் அமைப்பும் செயற்பாடும். பிரஞ்சுக்காரர் எங்கிருந்தாலும் பிரஞ்சுக்காரராகத் தொடரவேண்டும் என்ற பிரஞ்சு அரசின் கடமை உணர்வின் வெளிப்பாடே அல்லயன்ஸ் பிரஞ்சைஸ் அமைப்பும் செயற்படும். ஜெர்மானிய, டச்சு, இத்தாலிய டானிஷ் போர்த்துக்கேய அரசுகளும் இத்தகைய அமைப்புகளைப் பிற நாடுகளில் அமைத்துள.
புலம்பெயர்ந்த தமிழர்கள், புகுந்த நாடுகளில் தமிழராகத் தொடர்வதை ஆதரிக்க வேண்டும் என்ற கண்டோட்டம் தமிழ்நாட்டில் குறைவு. கலைக்குழு வேண்டுமெனில், பயணச்சீட்டுடன் உணவு உறையுளையும் சம்பளத்தையும் வெளிநாட்டுத் தமிழர் கொடுக்கவேண்டும், தமிழ் நூல்களை விலைகொடுத்து வாங்கவேண்டும்.
1968இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாட்டுக்கும் பின்னர்தான் தமிழக அரசு மட்டத்தில், அயலகத் தமிழர் பற்றிய புரிந்துணர்வு ஏற்படத் தொடங்கியது. சிறு சிறு முயற்சிகளாக அப்புரிந்துணர்வு வெளிப்பட்டது.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பிஜித்தமிழருக்குத் தமிழ் கற்பிக்கப் பாடத்திட்டம் வகுத்து உதவியதுடன் தமிழ் நூல்களை அச்சிட்டு வழங்கியது. மொரிசியசு சென்று வந்த அந்நாள் அமைச்சர் இராசாராம் அந்நாட்டுக்குத் தமிழ் நூல்களை அனுப்பினார். அண்மையில் அங்கு இசை ஆசிரியர் ஒருவரை ஓராண்டுக்கு அனுப்பியிருந்தது தமிழக அரசு. ஈழத்துத் திருக்கேதீச்சரத் திருப்பணிக்குத் தமிழக அரசு கல்தூண்கள் அமைத்துக் கொடுத்தது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்குத் தமிழ் நூல்களைத் தமிழக அரசு வழங்கியது. உலகத் தமிழாராய்ச்சியாளரை இணைக்க அனைத்துலகத் தமிழாராரய்ச்சி நிறுவனமும், உலகத் தமிழரை இணைக்க உலகத் தமிழ்ச் சங்கமும் அமைந்தன. தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழருக்காகத் தமிழ் மொழிப் பயிற்சி வகுப்புகளை நடாத்தியது. சென்னை, திருநெல்வேலிப் பல்கலைக் கழகங்கள் உலகத் தமிழருக்கு அஞ்சல்வழிக் கல்வியை அறிமுகம் செய்தன. மருத்துவம் மற்றும் தொழில் நுட்பக் கல்விகளில் உலகத் தமிழருக்கு இடஒதுக்கீடுகள் அமைந்தன. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இவ்வழி முயற்சியே.
அரசு சாரா முயற்சிகளாக, பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகம், உலகத் தமிழர் மையம் பேன்றவை அமைந்து தமிழகத்துக்கும் உலகத் தமிழருக்கும் இடையே உறவுப்பாலங்கள் அமைத்தன. மார்கழியில் சென்னையில் உலகத் தமிழ்க் கலைஞர்களுக்காகத் தனியாக இசை நடன விழா அமைந்து வருகிறது.
பாலைவனத்தில் பசுஞ்சோலைகளாக இடையிடையே இவை தெரிந்தாலும் உள்ளகக் கட்டமைப்புள்ள தொடர்ச்சியான அமைப்பு எதையும் தமிழக அரசு நிறுவவில்லை. உலகத் தமிழச் சங்கம் உயிர் பெறவேயில்லை. அல்லயன்ஸ் பிரஞ்சைஸ், பிரிட்டிஷ் கவுன்சில் போன்ற பண்பாட்டுச் சாளரம் ஒன்றைத் தமிழக அரசு அமைக்கவில்லை.
ஓர் இலட்சம் தமிழருக்கு மேல் வாழும் பிஜி, மொரிசியசு, இறியுனியன், தென்ஆபிரிக்கா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, எமிரேட்ஸ், இலங்கை ஆகிய பத்து நாடுகளிலும் பத்துத் தமிழ்ச் சாளரங்களை அமைக்க இதுவே நல்ல சூழ்நிலை. அச்சாளரங்கள் வழி தமிழ்த் தென்றல் அந்த நாடுகளுக்குள் வீசும். தமிழகத்தில் வெளிவரும் நாளிதழ்கள், சஞ்சிகைகள், நூல்கள், ஒலி ஒளி நாடாக்கள் அம்மையங்களில் தவழவேண்டும். தமிழ்நாட்டைப் பற்றிய சுற்றுலா, கல்வி, மருத்துவத் தகவல்கள் அங்கு சேரவேண்டும். அந்நாட்டுத் தமிழர் தமிழகத்துடன் தொடர்பு கொள்ளவும் தமிழகத் தமிழர் அந்நாட்டுத் தமிழருடன் உறவு கொள்ளவும் இப்பண்பாட்டுப் பலகனி பாலமாக அமையும். கலைக்குழுக்களையும் ஒவியர், எழுத்தாளர், தமிழ்க்கணிப்பொறி வல்லுனர்களையும் அந்நாடுகளுக்கு அனுப்ப இச்சாளரம் பயன்படும். தமிழ்க் கலைச்சொல் சீர்மை, கணிப்பொறித் தமிழ் வளர்ச்சி, தமிழ் இலக்கணச் சீர்மை போன்ற தமிழ் வளர்ச்சி முயற்சிகளை ஒருங்கிணைக்க இச்சாளரம் உதவும்
இலங்கையில் ஆட்சி மொழி, சிங்கப்பூரில் தேசிய மொழி, மலேசியாவிலும் மொரிசியசிலும் பிஜியிலும் பாடமொழி எனப் பரந்து பயனுறுத்தி வரும் மொழியாகத் தமிழ் இருப்பதால், உலகத் தமிழர் தத்தம் பண்பாட்டு அடையாளங்களைப் பேண, உள்ளகக் கட்டமைப்புள்ள தொடர்ச்சியான அமைப்பை ஏற்படுத்துவதே தமிழகத்தின் தொப்புட் கொடிக் கடமையாகும்.
திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழரால் தமிழகம் பெற்ற நன்மைகளுக்கு ஈடாக, இன்றைய உலகமயமயாக்கச் சூழலில் தமிழகம் உலகத் தமிழருக்குச் செய்யவேண்டிய முக்கியமான கடமைகளுள் இதுவுமொன்றாகும்.

தமிழ் படித்தோருக்கு வேலை வாய்ப்பு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கணினியியலில் தேர்ச்சி; உடனே வேலை வாய்ப்பு. மருத்துவத்தில் தேர்ச்சி; வருவாய்க்குக் குறைவில்லை. சோதிடத்தில் பயிற்சி; 93 வயதான சோதிடர் வரதன் கொடுக்கும் நன்கொடைகளே அத்துறையின் செழிப்புக்குச் சாட்சி. பொறியியல், உயிரியல், வேதியியல் என நீளும் அறிவியல் துறைகளில் பட்டமும், பயிற்சியும் பெற்றவர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிப்பது குறைவு. வணிகப் படிப்பில் சேர இருக்கும் போட்டியே அதன் வருவாய்ச் செழிப்பின் அளவுகோல்.
வருவாய் மட்டுமல்ல, சமூகத்தின் மதிப்பு, நாட்டின் எல்லைகளைக் கடந்து மனித சமுதாயத்தின் கூட்டு வளர்ச்சிக்குப் பங்காற்றினோம் என்ற மன நிறைவு, இவை யாவும் மேற்கூறிய துறைகளில் பயின்றோருக்குக் கிடைக்கிறது.
ஆனால், பட்டப் படிப்புகளைத் தமிழ் மொழியியலிலும் தமிழ் இலக்கியத்திலும் அனைத்து மட்டத்திலும் பயின்றோர் வருவாய்க் குறைவால் வாடுகின்றனர். அத்தகையோருக்காகச் சங்கம் ஒன்றே இயங்கி வருகிறது; வேலைவாய்ப்புகளைப் பல்வேறு நிலைகளில் உருவாக்க முயல்கிறது; அவர்களின் முன்னேற்றத்துக்கான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகிறது.
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் கணிதத்தில் புலி. பட்டப் புகுநிலையில் கணிதத்தைப் பாடமாகப் படித்தவர்; தந்தையாரின் தமிழ்ச் சூழல் பட்டப் படிப்புக்குத் தமிழைப் பாடமாகக் கொள்ள இவருக்கு ஆர்வத்தைத் தந்தது. தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் இவரைப்போல் தமிழைப் படிக்க வருவோர் மிகக் குறைவு.
வேறு துறைகளில் இடம் கிடைக்காதவர்களே பெரும்பாலும் தமிழைப் பாடமாகப் படிக்க வருகின்றனர். வடிகட்டலில் கடைநிலையில் உள்ளோர், இருக்கவே இருக்கிறது தமிழ் எனக் கருதித் தமிழைப் பாடமாகக் கொள்கின்றனர்.
தமிழைப் பாடமாகப் படித்தோரிடையே வேலைவாய்ப்புக் குறைவுக்கான காரணங்கள்:
வேறுவழியின்றித் தமிழுக்கு வந்தோர், தமிழ்ப் பட்டதாரிகளாக, புலவர்களாக வெளிவருகின்றனர். வேலைவாய்ப்புப் போட்டியிலும் பிற துறையாளர் போல் இவர்களால் முன்னிற்க முடிவதில்லை.
வளர்ச்சிக்கு உரிய கருவியாக, தொடர்புக்கு உரிய வாகனமாகத் தமிழ் தொடரவேண்டும் என்ற கண்ணோட்டமில்லாப் பாடத்திட்டங்கள் மலிந்த கல்விச் சூழ்நிலை.
தமிழைப் பாடமாகப் படித்தவர்களை எங்கெங்கெல்லாம் பணிகொள்ளலாம் என்ற கருத்தோட்டமற்ற சமூக அமைப்பு.
தமிழைப் பாடமாகப் படித்துவிட்டு, கடந்த நாற்பது ஆண்டு காலப்பகுதியில் பணிக்குச் சேர்ந்த பெரும்பாலோரின் பணிச் சோர்வு.
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியையே தமிழர் பயனுறுத்த வேண்டும் என்ற கொள்கையற்ற சூழ்நியைில், பிறமொழிகளை வாழ்வுடன் இணைக்காமல் தமிழர் வாழ்வு முழுமை பெறாது என்ற பிறழ்ச்சிச் சிந்தனையாளரின் உள்ளீடுகள் சமூகத்தின் நச்சு வேராகியதால், தமிழைப் பாடமாகப் படித்தோர் தாழ்நிலையினரென்ற கருத்துருவாக்கம்.
தமிழைப் பாடமாகப் படிப்போருக்குரிய புகழ் + வருவாய் இலக்குகளான பட்டிமன்ற மேடைகள், பேச்சு மேடைகள், ஒலி-ஒளி-அச்சு ஊடக வெளிப்பாடுகள் யாவிலும் தமிழரின் பண்டைய பெருமைபேசி அரைத்த மாவை அரைப்பதில் யார் தம்முள் வல்லவர் என்ற பொறாமை மிகு போட்டிச் சூழல்.
தமிழைப் பாடமாகப் படித்தோரின் வேலைவாய்ப்பைப் பெருக்கச் செய்யவேண்டியன:
தொடக்கப் பள்ளிகளில் அறிவியல் தமிழ் என்ற பாடநூலைத் தமிழக அரசு அறிமுகம் செய்துளது. சென்னைப் பல்கலைக் கழகக் கலையியல் இளவல் பட்டத்துக்குத் தமிழைப் பாடமாகப் பயில்வோர் பயன்பாட்டுத் தமிழ் என்ற நூலைக் கட்டாயமாகப் படிக்கும் நிலை வந்துளது. இவை என் கவனத்துக்கு வந்தவை. இத்துறையில் வேறு முயற்சிகளும் இருக்கக் கூடும். வளர்ச்சிக்குரிய கருவியாகத் தமிழ் மொழியை எடுத்துச் செல்ல இத்தகைய பாடத்திட்டச் சீராக்க முயற்சிகளைத் திட்டமிட்டு வேகமாக முன்னெடுக்க வேண்டும். தமிழைப் பாடமாகப் படிப்போரின் கண்ணோட்ட மாற்றத்துக்குப் பாடத்திட்டச் சீராக்கமே வழிகாட்டி. வளர்ச்சிக்கும் தொடர்புக்கும் உரிய மொழியாகத் தமிழை எடுத்துச் செல்லத் தமிழைப் பாடமாகப் படித்தோரே பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுவர்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ், பொங்கு தமிழ் என்பன முழக்கங்களாவே நின்றுவிடுகின்றன. துறைதொறும் துறைதொறும் தமிழ் வழங்கும் நிலை வருமாயின், ஒவ்வொரு துறையிலும் தமிழைப் பாடமாகப் படித்தோரின் துணை தேவையாகும். அவ்வத் துறைகளுள் உள்ளோர் ஒவ்வொருவரும் மொழி வல்லுநராக இருப்பது அரிது. கணக்காளர் இருப்பதுபோல, ஆவணக் காப்பாளர் இருப்பது போல, களஞ்சியக் காப்பாளர் இருப்பது போல, ஒவ்வொரு துறையிலும் தமிழ்மொழிக் காப்பாளர் இருப்பர். தொடர் வண்டிகளில் எக்ஸ்பிரஸ் வராது; பேருந்துகளில் 29அ வராது; இதழ்களில் இந்தியா டுடே வராது; திரைகளில் தேவதையை(?) கண்டேன் வராது; தொலைக்காட்சியும் வானொலியும் ஆடுகள் வந்தது எனப் பேசா; அறிவியலாளர், வணிக மேலாளர், பெயர்ப்பலகை எழுதுவோர் தமிழ்ச் சொற்களைத் தூக்கி எறியார்.
தமிழாசிரியராக, எழுத்தாளராக, இதழாளராக, மெய்ப்பாளராக, பேச்சாளராக மட்டுமே வேலை தேடும், தமிழைப் பாடமாகப் படித்தோரைத் தமிழ் மொழி வளர்ச்சியாளராகப் பார்க்கின்ற சமூகக் கண்ணோட்டத்தை உருவாக்கினால், அவர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும். முன்பு அப்படித்தான் இருந்தது; சங்கம் அமைப்பவரோ, கடை தொடங்குபவரோ, அவ்வமைப்புக்குப் பெயர் வைக்க முதலில் தேடுவது தமிழ்மொழி அறிஞரையே. இன்று அவரவர் தனக்குத் தெரிந்தவாறு பெயர் வைக்க முற்படுவதால் போராட்டங்கள் வெடிக்கின்றன. சோதிடரை நாடும் மூடப் பழக்கத்தை விடாத சமூகம், தமிழ் மொழி அறிஞரை நாடும் நல்ல பழக்கத்தைக் கைவிட்டதே!
தமிழைப் பாடமாகப் படித்தவருள் பெரும்பாலோர் போதுமான தமிழ் மொழிப் புலமையாளராக இல்லாதிருப்பதால் பணியிடங்களில் திறமையுடன் மிளிரமுடியவில்லை. வடிகட்டலில் கடைநிலையாரை மட்டுமே ஈர்க்காமல், போக்கற்றவர்களின் புகலிடமாகத் தமிழ்ப் பாடப்யிற்சி அமையாமல், திறமைசாலிகளை மாணவர்களாக ஈர்க்கும் நிலை வரின், தமிழைப் பாடமாகப் படித்தோருக்கு வேலைவாய்ப்புப் பெருகும்.
இந்திய மாநில மொழிகள், தென்கிழக்காசிய மொழிகள், மேற்காசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய மொழிகள் இவற்றுள் ஒன்றையேனும் தமிழுடன் சேர்த்துப் பயிலவேண்டிய கட்டாயம் தமிழைப் பாடமாகக் கொள்வோருக்கு உண்டு. திணித்தால் கற்போம் என்ற உளப்பாங்கை மாற்றி, விரும்பிக் கற்கும் நிலை வந்தால், தமிழர் வாழாத மாநிலங்களிலும் நாடுகளிலும் மொழிபெயர்ப்பாளராகத் தமிழைப் பாடமாகக் கற்றோருக்கு வேலைவாய்ப்புண்டு.
தமிழ் தெரியாதோருக்குத் தமிழ் கற்பிக்கும் திறனை வளர்க்கும் பாடத்திட்டத்தைத் தமிழைப் பாடமாகக் கொள்வோருக்கு வகுத்தால், உலகின் 85 நாடுகளில் பரந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கும், தமிழ்மொழி மீது காதல் கொண்டு பயில விரும்பும் பிற மொழியாருக்கும் தமிழ்மொழி கற்பிக்கும் வேலைவாய்ப்புகள் பெருகும்.
எழுத்தும் அச்சும் தகவல் பரிமாற்றமும் வேகமாக வளர்கையில், மொழி வல்லுனர்களின் தேவை அதிகரிக்கும். ஒவ்வொரு துறையிலும் அவ்வத் துறைபோகியோர், தத்தம் கருத்துகளை, நிகழ்வுகளை, எழுதியபின் மொழி வல்லுநர் ஒருவரின் பார்வைக்கு அனுப்பும் காலம் வரும். தமிழைப் பாடமாகப் படித்தோருக்குப் பதிப்பாசிரியர் பணி அங்கு காத்திருக்கும்; மொழியில் மட்டுமல்ல, பதிப்பு ஒழுங்கிலும், மெய்ப்புப் பார்ப்பதிலும் வல்லுநராகித் தமிழைப் பாடமாகப் படித்தோர் வேலை பெறுவர்.
அறிவியலும் தொழினுட்பமும் வேகமாக வளர்கையில் புதுப் புதுச் சொற்களை உருவாக்க வேண்டும்; தொடர்களைக் குறுக்கங்களாக்க வேண்டும். மொழிப் புலமை, வேர்ச் சொற்களிற் புலமை, வேர்களுடன் விழுதுகளைச் சேர்த்துப் புதுச் சொற்களை உருவாக்கும் திறமை, தமிழ்த் தொடர்களுக்கு ஒலிஇயைந்த குறுக்கங்களை உடனுக்குடன் ஆக்குந் திறமை உடையோருக்கு வேலைவாய்ப்புகள் பெருகும்.
கவர்ச்சியான தமிழ்த் தொடர்களை எழுதுவோருக்கு விளம்பர நிறுவனங்கள் செழிப்பான பணமுடிப்பு வழங்குகின்றன. விளம்பரமில்லாத உற்பத்தி வெல்லாது; உற்பத்தியில்லாத பொருண்மியம் உதவாது; கவர்ச்சித் தொடரில்லா விளம்பரத்தால் விற்பனை பெருகாது; தமிழில்லாமல் பொருண்மியமே வளராது. எனவே புலமைத் தமிழ் மொழியாளரைத் தேடுகின்றன விளம்பர நிறுவனங்கள்.
தமிழில்லாமல் வாழ்வில்லை என்ற சூழ்நிலையை நோக்கித் தமிழர் முன்னேறுகையில் தமிழைப் பாடமாகப் படித்தோருக்கான வேலைவாய்ப்புகள் அளவுக்கதிகமாகவே வரப்போகின்றன. அரைத்த மாவை அரைப்போரை உருவாக்கும் பாடத்திட்டங்களை மாற்றி, தமிழை வளர்ச்சிக்குரிய மொழியா மாற்றும் பாட்த்திட்டங்களே, தமிழைப் பாடமாகக் கொள்வோருக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கும்.

வள்ளலார் கடிதங்கள்: மதிப்புரை

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஆங்கிலேயர் ஆட்சியின் உச்ச காலங்களில் தமிழ்நாட்டில் அன்புமழை பொழிந்துகொண்டிருந்த ஆன்மீக வள்ளலாரின் 87 கடிதங்களை ஆ. பாலகிருஷ்ணபிள்ளை தொகுத்து 124 பக்கங்களில் தமிழுலகுக்குத் தந்துள்ளார்.
கி.பி. 1923இல் பிறந்து 51 ஆண்டுகள் வாழ்ந்து கி. பி. 1873இல் மறைந்தவர். சிதம்பரம் இராமலிங்கம் எனத் தன்னை அழைக்குமாறு கேட்டுக் கொண்டவர் வள்ளலார்.
நாயக்கர் காலத்தில் தமிழுள் விரவிய வடமொழிச் சொற்களின் இடத்தைப் படிப்படியாக ஆங்கிலச் சொற்கள் நிரப்பி வந்த அக்கால வழக்கையொட்டி வள்ளலாரின் 74 உரைநடைக் கடிதங்களில் ஆங்கில மொழி, வடமொழி மற்றும் உருதுமொழிச் சொற்கலப்பு உள்ளது. 13 செய்யுள்நடைத் திருமுகங்களில் நாயக்கர் கால மரபை ஒட்டி வடமொழிச் சொற்கலப்பு உள்ளது.
ஓட்டல், லாங்கிளாத்து பீசு, ரிஜிஸ்டர், கலக்டர், இஸ்கூல், ரயிட்டர் (ரைட்டர்), ராயல் போன்ற ஆங்கிலச் சொற்கள் தமிழுள் வந்து 150 ஆண்டுகளுக்கு மேலாகின்றன என்பதை இக்கடிதங்கள் வாயிலாக அறியலாம். மெய்யெழுத்தில் சொற்கள் தொடங்காதென்பதால் இஸ்கூல் என்றார். கிளாத் என மெய்யீறு வராதென்பதால் கிளாத்து என்றார்.
ஜில்லா போன்ற உருதுச்சொற்களையும் வள்ளலார் எடுத்தாண்டுளார்.
திர்ப்த்தி, வையாசி போன்று பல வடமொழிச்சொற்கள், தமிழில் வள்ளலார் எழுத்துக் கூட்டியவாறே உள்ளனவா அல்லது படியெடுத்தவரின் எழுத்துக்கூட்டலா தெரியவில்லை.
வள்ளலாருக்கு மிக நெருங்கியவராக இறுக்கம் இரத்தினமுதலியார் இருந்தார். அவருக்கு எழுதிய 37 கடிதங்கள் இத்தொகுப்பில் உள. வள்ளலாரும் இரத்தின முதலியாரும் ஒருவர்மீது ஒருவர் மதிப்பும் அன்பும் நட்பும் கொண்டிருந்தனர். இரத்தின முதலியாரின் நலம் பற்றி வள்ளலார் அதிக ஆர்வம் காட்டினார். வள்ளலாரின் பாடல்களை வெளியிட விரும்பிய இரத்தின முதலியார், அப்பாடல்களை வள்ளலாரிடம் இருந்து பெறுவதற்காகத் தவப்பழி கிடந்தார். ஒருவேளை மட்டும் உண்டார். இதைப்பொறாத வள்ளலார் தவப்பழியைக் கைவிடுமாறு முதலியாரிடம் இரந்தார். இதுபேன்று பல நிகழ்வுகளில் இருவரிடையே இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துவதை இக்கடிதங்கள் காட்டுகின்றன.
வேலு முதலியார், சுந்தரப்பிள்ளை, திருவேங்கடமுதலியார், சோமுச்செட்டியார், நாயக்கர் எனப் பலர் வள்ளலாருக்கும் இரத்தின முதலியாருக்கும் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் குருவாக இராமலிங்க சுவாமியைக் கொண்டனர். ஆனால் அவரோ, `இராமலிங்க சாமியென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில் இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும்' என அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கடிதம் எழுதினார். தனது நட்புக்குரியவரின் குடும்பத்தவரை அன்போடு விசாரிக்கும் வரிகள் வள்ளலாரின் கடிதங்களில் உள.
புதுவை வேலு முதலியாருக்கு எழுதிய 6 கடிதங்களும், நயினார் ராமசாமி, பொன்னுசாமிப்பிள்ளை, சபாபதி சிவாச்சாரியார் ஆகியோருக்கு எழுதிய 5 கடிதங்களும் இத்தொகுப்பில் உள.
சமூக அழுத்தங்களுக்கு வள்ளலார் மதிப்பளித்தார். கடமைகசை் சரிவரச் செய்யாமல்விடின் தான் நிந்தனைக்குள்ளாகவேண்டுமென அவர் எழுதினார். நிந்தனை வராமலிருக்கும் உபாயங்களை மேற்கொண்டார்.
துன்புற்றவர்களுக்கு ஆறுதல் தருவதைத் தன் முதற் கடமையாக்கினார். சிவசிந்தனை, ஜீவகாருண்ணியம் ஆகிய இரு வழிகளையும் கடிதங்களில் வலியுறுத்தினார். பல ஊர்களில் தவச்சாலைகளும் அன்னதான நிலையங்களும் அமைக்க விரும்பினார். அதற்காகப் பயணங்கள் மேற்கொண்டார்.
பயணகாலங்களில் உடல்நலிவுற்றார். அவருக்கு மருத்துவம் தெரிந்திருந்தது. நண்பர்களுக்கு மூலிகை மருத்துவ ஆலோசனைகளைக் கடிதங்களில் எழுதினார்.
தருமச்சாலைகள் அமைத்துத் தொடங்கும் நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பினார். சன்மார்க்க விவேக விருத்தி என்ற இதழைத் தொடங்க நிதி அளித்தோர் பட்டியலும் இத்தொகுப்பில் உளது. தான்பெற்ற அற்புத அறிவுபற்றிக் குறிப்பிடும் சபை விளம்பரம், சமரச வேத பாடசாலைக்கான அறிவிப்பு, அற்புதம் நடைபெறவுள்ளதான வதந்தியை மறுத்த சித்தி வளாக விளம்பரம் உள்ளிட்ட 8 அறிவிக்கைகள் இந்தத் தொகுப்பில் உள.
வள்ளலாரின் இறுதி 3 ஆண்டுகளில் அவர் விட்டுச் சென்ற 9 கட்டளைகளும் இதில் உள. இறந்தவரை எரிக்காமற் புதைக்க வேண்டும் என்ற கட்டளையும், இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக்கொடுத்துத் தந்தையார் உபகாரம் செய்வர், நம்பிக்கையுடனிருங்கள் என்ற கட்டளையும், சுத்த சிவ சன்மார்க்கமே உலகில் இனி வழங்கும் என்ற கட்டளையும், சபை வழிபாட்டு விதிக்கட்டளையும், அவரவர் வழிபாட்டுமுறையை அவரவர் செய்யுமாறும் அதை மற்றவர் தடைசெய்யாதிருக்குமாறும் குரோதங்களை உடனுக்குடன் மறந்துவிடவேண்டும் என்னும் கட்டளையும், சிற்சபையிற் புகுந் தருணமிதுவே என 1873 கார்த்திகையில் எழுதிய கட்டளையும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள.
இந்நூலின் தொடக்கத்தில் பொருளடக்கம் அமைந்திருப்பின் வாசகருக்கு உதவியிருக்கும். கடிதங்கள் பலவற்றின் காலத்தைக் குறிக்காதமை போதிய தகவலைத் தொகுப்பாசிரியர் பெறமுடியாமையையே காட்டுகிறது. 150 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவற்றை மேலும் ஆராய்ந்து கால வரிசைக்குள் கொணர்தல் அவசியம். வள்ளலாரை அதிகம் தெரியாதவர்களுக்காகத் தொகுப்பாசிரியர் அறிமுக முன்னுரையை எழுதியிருக்கலாம். அதை ஓரளவு ஈடுசெயும் வகையான் பேரா. வீ. அரசு எழுதிய முன்னுரை அமைந்துளது.
அக்கால சமூக, பொருளாதார, ஆட்சி, போக்குவரத்து, அஞ்சல் அமைப்புகளின் கண்ணாடியாக உள்ள இந்நூலை அனைத்துச் சமயநெறியில் உள்ள தமிழ் தெரிந்தவர்களும் படிப்பார்களாயின், அன்புநெறியையே பொதுநெறியாகத் தமிழகம் நெடுங்காலமாகப் பல்வேறு வழிகாட்டிகள் மூலம் பேணி வந்ததன் பாங்கை வள்ளலாரின் காலக்கண்களூடாகத் தெரிந்துகொள்வர். வரலாற்று ஆய்வாளர்களுக்கும் இந்நூல் அரிய களஞ்சியம்.


1.10.2002

Wednesday, September 28, 2005

செம்மொழியா? சூத்திர மொழியா?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
எந்த ஒரு மொழியும் செம்மொழியாகத் தக்கதா என்பதைத் தீர்ப்போர் மொழியியல் அறிஞரும், பல்கலைக்கழகங்களுமே. பல நாடுகளில், பல்கலைக் கழகங்களே செம்மொழித் தகுதிக்குரிய மொழிகளைப் பட்டியலிட்டுக் கற்பிக்கின்றன; செம்மொழிகளுக்காகத் தனித் துறைகளை அமைத்துள. மேலைப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இலத்தின், கிரேக்கம் இரண்டும் மட்டுமே தொடக்க காலச் செம்மொழிகள். பின்னர் ஈபுறு, பாரசீகம், அரபு, சீனம், வடமொழி ஆகியனவற்றையும் சேர்த்திருக்கின்றனர்.1918இல் சைவசித்தாந்த மகாஜன சமாஜத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலவர்கள், தீர்மானம் இயற்றிச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குஅனுப்பினர். தமிழைச் செம்மொழியாகச் சேர்க்க வேண்டும், செம்மொழிப் பட்டியல் முன்னரே உண்டு. அப்பட்டியலில் அரபு, பாரசீகம், வடமொழி இருந்தன. தமிழையும் அப்பட்டியலில் சேர்க்கவேண்டும் எனத் தீர்மானம் இயற்றினர். 1919, 1920ஆம் ஆண்டுகளில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் இத்தகைய தீர்மானத்தை இயற்றிச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளனர். (வா. செ. குழந்தைசாமி, தமிழா தமிழா, அக்டோபர் 2004)எந்த மொழியையும் செம்மொழியாக இதுவரை சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிக்கவில்லை. முனைவர் மு. வரதராசன், முனைவர் பொற்கோ ஆகிய துறைபோகிய மொழியியல் அறிஞர் இருவரும் துணைவேந்தர்களாகப் பணியாற்றிய காலப் பகுதிகளிலேயும், சைவசித்தாந்த மகா சமாஜத்தின் தீர்மானத்தையோ, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தீர்மானத்தையோ சென்னைப் பல்கலைக்கழகம் எடுத்து நோக்கவில்லை.செம்மொழியாக எந்த ஒரு மொழியையும் அரசு அறிவிப்பது, அம்மொழி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கவும், அம்மொழிப் புலமையாளருக்கு விருது வழங்கவும், இன்னோரன்ன உற்சாக, ஊக்க நடைமுறைகளுக்குமாகவே. வேறெதுவுமல்ல.இந்திய நடுவணரசின் கல்வியமைச்சு, (அதன் இன்றைய வாரிசான மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சு), 1977ஆம் ஆண்டு முதலாக செம்மொழிகளின் வளர்ச்சிக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடுகளை ஏற்படுத்தி, அந்த நிதி எவ்வாறெல்லாம் பயனுறுத்தியது என்பதை, தனது ஆண்டறிக்கைகளில் கூறிவருகிறது. 1947இல் நாடு விடுதலை பெற்ற பின்பு வந்த இவ்வமைச்சின் ஆண்டறிக்கைகளில், தொடக்கத்தில் கூட்டாட்சி மொழி என்ற பிரிவு இருந்தது. இந்தியை வளர்க்கவும், மேம்படுத்தவும், வளமாக்கவும் திட்டங்களை வகுத்து இப்பிரிவில் நிதி ஒதுக்கினர். நடுவண் அரசின் கல்வி அமைச்சே இத்திட்டங்களின் பணிமனை.இந்தியாவின் மூத்த செவ்விய இலக்கியங்களைப் பிறமொழிகளில் மொழி பெயர்க்க, ஐ.நா.வின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்துக்குக் கல்வி அமைச்சு நிதி வழங்கியதையும், 34 மூத்த செவ்விதான இந்திய மொழி நூல்களை ஐ.நா. அமைப்புக்கு அமைச்சு விதந்துரைத்ததையும் 1956-57ஆம் ஆண்டறிக்கை கூறும்.எனினும் 1958ஆம் ஆண்டு வரை, இந்தியைத் தவிர வேறு இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக நடுவண் அரசின் கல்வியமைச்சு நேரடியாக நிதி ஒதுக்கவுமில்லை, ஆண்டறிக்கைகளில் குறிப்பிடவுமில்லை.1958ஆம் ஆண்டு முதலாக நடுவண் அரசின் உள்நாட்டமைச்சு, வடமொழி, பாரசீகம், அரபு ஆகிய மொழி அறிஞருக்குக் குடியரசு நாளன்று விருதும் பணமுடிப்பும் வழங்கத் தொடங்கியது.1959இல் வடமொழி மைய வாரியத்தை நடுவண் அரசு அமைத்தது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பதஞ்சலி சாஸ்திரியை அதன் தலைவராக நியமித்தது. 1997இல் நீதியரசர் ரங்கநாத மிர்சா இவ்வாரியத் தலைவராக இருந்தார்.1960இல் வடமொழி ஆணையம் அமைந்தது. வடமொழி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகளின் தொடக்கம் இவைதாம். கல்வி அமைச்சில் மொழிகளுக்கான பிரிவு ஏற்பட்டது. இந்திக்கும் வடமொழிக்கும் நிதி ஒதுக்கும் பிரிவாக இஃது அமைந்தது.வடமொழியின் வளர்ச்சி, பெருக்கம், வளமாக்கல் யாவுக்குமாக 1961-62இல் ரூ. 645,000 ரூபாய் ஒதுக்கிய நடுவண் அரசு, அத்தொகையைக் குருகுலங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் பகிர்ந்தது.தேவநாகரி வரிவடிவத்தை இந்தியாவிலுள்ள ஏனைய மொழிகளின் ஒலிகளுடன் இணைக்கவோ, அவ்வொலிகளுக்கேற்பப் புதிய வரிவடிவங்களைத் தேவநாகரியில் இணைக்கவோ திட்டமொன்றையும் அரசு கொண்டு வந்தது, நிதியும் ஒதுக்கியது.இந்தியாவின் மாநில அரசுகள் மற்றும் நேரடி ஆட்சிப் பகுதிகள் மூலம் வடமொழியை வளர்ப்பதற்கான நடுவண் அரசின் திட்டம் 1962ஆம் ஆண்டு முதலாக நடைமுறையில் உள்ளது.1964இல் இந்தி மொழி வளர்ச்சிக்கெனத் தனி ஒதுக்கீடு, வடமொழி உள்ளிட்ட இக்கால இந்திய மொழிகள் வளர்ச்சிக்கெனத் தனி ஒதுக்கீடு, என நடுவண் அரசின் கல்வி அமைச்சகம் நிதி வழங்கியது.இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் இதே தலைப்பில் திட்டக்கூறு அமைந்தது. வடமொழியைச் செம்மொழியாக அப்பொழுது கல்வியமைச்சு குறிப்பிடவேயில்லை. இக்கால மொழிகளுள் ஒன்றாகவே வடமொழியை 1964இல் கல்வியமைச்சு கருதியது.ஏனைய இக்கால இந்திய மொழிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் வடமொழியின் பெயரை மட்டும் குறித்தே அப்பொழுதைய திட்டமும் நிதி ஒதுக்கீடும் இருந்தது.கல்வி அமைச்சில் மொழிகளுக்கான பிரிவு என இருந்ததை, 1970ஆம் ஆண்டு முதலாக மொழிகளை வளர்க்கும் பிரிவு என மாற்றினர். இப்பிரிவில் நான்கு தலைப்புகள் இருந்தன. 1) இந்திய மொழிகளில் கலைச் சொல்லாக்கம்; 2) இந்தியின் வளர்ச்சி; 3) ஆங்கிலம் உள்ளிட்ட இக்கால மொழிகளின் வளர்ச்சி; 4) வடமொழி வளர்ச்சி.விடுதலைக்குப்பின் 1958ஆம் ஆண்டு வரை வடமொழி வளர்ச்சிக்கென நிதி எதையும் ஒதுக்காத நடுவண் அரசின் கல்வி அமைச்சு, 1962ஆம் ஆண்டில் பெயர் சொல்லி நிதி ஒதுக்கீடு செய்ததும், 1965ஆம் ஆண்டில் இக்காலமொழிகளுள் ஒன்றாகக் கருதியதும், 1970ஆம் ஆண்டில் வடமொழி வளர்ச்சிக்காகத் தனித்தலைப்பு ஒன்றைக் கல்வி அமைச்சு தொடங்கியதும் படிப்படியான வளர்ச்சியே.தில்லியில் ஒன்றும் திருப்பதியில் ஒன்றுமாக வடமொழிக் கல்விக்கும் வளர்ச்சிக்குமாக 5.5.1970இல் தொடங்கிய இரு நிறுவனங்கள் பின்னர் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆயின.1972ஆம் ஆண்டில் அனைத்துலக வடமொழி மாநாட்டை நடுவண் அரசின் கல்வி அமைச்சே முன்னின்று நடத்தியது. அவ்வாண்டிலேயே மாநிலங்களின் கல்வி அதிகாரிகளை அழைத்து வடமொழியைப் பேணவும், வளர்க்கவும், மேம்படுத்தவும் வழிவகைகளை ஆராயும் மாநாடு ஒன்றையும் நடத்தியது.1977ஆம் ஆண்டில் நடுவண் அரசின் கல்வி அமைச்சிலுள்ள மொழி வளர்ச்சிப் பிரிவில் நான்கு தலைப்புகளாக நிதி ஒதுக்கீடு அமைந்தது. 1) இந்தி மொழி வளர்ச்சி; 2) இக்கால இந்திய மொழிகளின் வளர்ச்சி; 3) ஆங்கிலம் மற்றும் பிற நாட்டு மொழிகளின் வளர்ச்சி; 4) வடமொழி, அரபு மற்றும் பாரசீகம் ஆகிய செம்மொழிகளின் வளர்ச்சி.செம்மொழி என்ற சொல்லாட்சியைக் கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக (1977ஆம் ஆண்டு தொடங்கி) நடுவண் அரசின் கல்வி அமைச்சு பயன்படுத்தி வருகிறது. வடமொழி, அரபு, பாரசீகம் ஆகியன செம்மொழிகள் என்பதை நடுவண் அரசின் கல்வி அமைச்சு ஏற்றுக் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கி வருகிறது.வடமொழி வளர்ச்சிக்காகப் பல இலட்ச ரூபாய்களை ஒதுக்கிய கல்வி அமைச்சு, அந்த ஆண்டில் அரபு மற்றும் பாரசீக மொழிகளின் வளர்ச்சிக்காக மூன்று இலட்சம் ரூபாய்களையும் ஒதுக்கியது.1978ஆம் ஆண்டு வரை உள்நாட்டமைச்சின் பணியாக இருந்த செம்மொழி அறிஞருக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்கும் திட்டம், 1978ஆம் ஆண்டு முதலாக நடுவண் அரசின் கல்வி அமைச்சின் திட்டமாகியது. கல்வியமைச்சின் விதப்புரையில் வடமொழி, அரபு, பாரசீகம் ஆகிய செம்மொழிகளின் புலமையாளருக்குக் குடியரசுத் தலைவர் விருதுகள் கிடைத்து வருகின்றன. 1978 ஆகஸ்ட் 15இல் 97 புலமையாளர் இவ்விருதுகளைப் பெற்றனர்.1981ஆம் ஆண்டு வரை இதே கொள்கை தொடர்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் செம்மொழிகளான வடமொழி, அரபு மற்றும் பாரசீகம் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கி வந்தது.உருது மொழி, சிந்தி மொழி ஆகிய இரண்டையும் வளர்க்க, இக்கால மொழிகளின் தலைப்பில் துணைத் தலைப்புகளாக 1981ஆம் ஆண்டு முதலாகக் கல்வி அமைச்சானது நிதியை ஒதுக்கி வருகிறது.தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது; அனைத்துலக நாடுகளிடையே புரிந்துணர்வை வளர்க்கிறது; நம் பண்பாட்டுப் பராம்பரியத்தைப் பேணுகிறது: எனவே வடமொழிக் கல்வியையும் பயிற்சியையும் மேம்படுத்தி, வளர்க்க இந்திய அரசு பல திட்டங்கைளை அறிமுகம் செய்து நிறைவேற்றி வருகிறது. செம்மொழிகளான வடமொழி, அரபு, பாரசீகம் ஆகியவற்றை வளர்க்கவும் பரப்பவும் முந்தைய ஐந்தாட்டுத் திட்டங்களில் உள்ளது போலவே ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் திட்டக்கூறு உள்ளது. இவ்வாறு கல்வியமைச்சின் 1996-97ஆம் ஆண்டறிக்கையில் கூறியுள்ளனர்.1986ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையிலும் 1992ஆம் ஆண்டின் புதுப்பித்த செயல் திட்டத்திலும் நடுவண் அரசின் வடமொழிக்கான இந்தத் திட்டமும் உள்ளடங்கியது.1990ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சின் மொழிகள் வளர்ச்சிக்கான கொள்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் வரவில்லை.1991ஆம் ஆண்டு முதலாக, உருது மொழி மற்றும் சிந்தி மொழி வளர்ச்சிக்காகத் தனித்தனி வாரியங்கள் அமைந்தன.1994ஆம் ஆண்டு முதலாக வடமொழி, அரபு, பாரசீகம், பாளி, பிராகிருதம் ஆகிய ஐந்து மொழிகளின் புலமைச் சான்றோருக்குக் கல்வி அமைச்சின் விதப்புரையில் செம்மொழிக்கான விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார். இந்த விருது வழங்கல் மூலம் புதிதாதப் பாளியையும் பிராகிருதத்தையும் 1994ஆம் ஆண்டு முதல் செம்மொழிகளாகக் கல்வி அமைச்சு ஏற்றது.1996இல் உருது, சிந்தி ஆகிய மொழிகளின் வாரியங்கள் தரம் உயர்ந்து அம்மொழிகளுக்கான தேசியக் கழகங்கள் ஆயின.வடமொழியானது ஒரு செம்மொழி மட்டுமல்ல; நம் பண்பாட்டுப் பேழையுமாம். இப் பண்பாட்டுப் பேழையைப் பாதுகாக்க வேண்டும், எங்கும் பரப்ப வேண்டும், முயன்று வளர்க்க வேண்டும். இது கட்டாயத் தேவை. எனவே, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணைக்கு அமையவும், 1986ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும் வடமொழிக் கல்வியை வளர்க்க இந்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து, நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு 1996-97ஆம் ஆண்டறிக்கையில் கூறியுள்ளனர்.1999-2000ஆம் ஆண்டு முழுவதையும் வடமொழி ஆண்டாகக் கொண்டாடக் கல்வியமைச்சு நிதி ஒதுக்கியது. விழாக்கள் முழுமையாக முடிவடையாதலால், மீண்டும் மார்ச்சு 2001 வரை கொண்டாட்டத்தை நீடிக்க அமைச்சு மேலதிக நிதி ஒதுக்கியது.2001-02 நிதி ஆண்டில் செம்மொழியான வடமொழிக் கல்விக்கும் வளர்ச்சிக்குமாக ரூ. 1,050 கோடியைக் கல்வியமைச்சு ஒதுக்கியது.செம்மொழியாக ஏற்றுக்கொண்ட அரபு மொழி வளர்ச்சிக்காகக் காலத்துக்குக் காலம் நிதி ஒதுக்கி வந்துளர். 2000-01 நிதிஆண்டில் அரபு மொழி வளர்ச்சிக்காக ரூ. 12 கோடியும் 2001-02 நிதி ஆண்டில் ரூ. 10.5 கோடியும் கல்வி அமைச்சில் ஒதுக்கினர்.2001ஆம் ஆண்டு முதல் இந்திய மொழிகளுக்கான தேசிய அவை அமைந்தது. இந்த அவையும் கல்வி அமைச்சைச் சார்ந்ததே. இந்தியப் பிரதமர் இந்த அவைக்குத் தலைவர். இந்திய மொழிகளை வளர்க்கவும், மேம்படுத்தவும், பரப்பவும் இந்திய அரசுக்கு இந்த அவை ஆலோசனை வழங்கும்.விடுதலைக்குப் பின்வந்த இந்திய அரசின் செம்மொழிச் சொல்லாட்சி, கல்வி அமைச்சின் அறிக்கைகளில் மட்டுமே உளது. 1977ஆம் ஆண்டு முதலாக வடமொழி, பாரசீகம், அரபு என்பன செம்மொழிகளாக இருந்தன. 1994இல் பாளியும் பிராகிருதமும் இந்தப் பட்டியலில் சேர்ந்தன. அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணை, தொடர்ச்சியான ஐந்தாண்டுத் திட்டங்கள், 1986இன் தேசிய கல்விக் கொள்கை என்பன இந்திய அரசின் செம்மொழிச் சொல்லாட்சிக்கும் நிதி ஒதுக்கீட்டுக்கும் அடித்தளமாக அமைந்தன. இந்த அடித்தளத்தில் நடைமுறைச் செயல்பாட்டிற்கான அரசாணைகள் அமைந்திருந்தன போலும்.1964இல் இக்கால மொழிகளுள் ஒன்றெனக் கூறிய வடமொழியை, 1977இல் செம்மொழி எனத் தனிப் பட்டியலிட்டது கல்வியமைச்சு. அத்துடன் அரபு, பாரசீகம் ஆகியனவும் செம்மொழிப் பட்டியலுள் வந்தன. 1994ஆம் ஆண்டில் பாளி, பிராகிருதம் இந்தப் பட்டியலுள் சேர்ந்தது. ஒவ்வொரு மொழியாகச் செம்மொழிப் பட்டியலுள் சேர்த்து வந்தது போலத் தமிழையும் இப்பொழுதாவது சேருங்கள் என்பதைத் தமிழ் மக்கள், தம் ஆணையாக 2004 மக்களவைத் தேர்தலில் கூறினர்.1918ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த மகா சமாஜமும் 1919, 1920இல் கரந்தைத் தமிழ்ச் சங்கமும் இதையே சென்னைப் பல்கலைக்கழகத்திடம் கேட்டனர்.2001-02ஆம் ஆண்டில் ரூ. 1,050 கோடி வடமொழிக்காகவும் ரூ. 10.5 கோடி அரபு மொழிக்காகவும் நிதி ஒதுக்கியதுபோல, கல்வி அமைச்சு தமிழ் மொழிக்கு ரூ. 1,500 கோடியோ ஏற்றதான தொகையையோ நிதியாக ஒதுக்க வகை செய்து, தமிழையும் வளர்க்க, மேம்படுத்த, பரப்ப நடுவண் அரசின் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே தமிழரின் நெடுங்காலக் கோரிக்கை.செம்மொழிப் பட்டியலில் தமிழையும் சேர்ப்பதற்கு முன்னுதாரணங்கள், அதுவும் சிக்கலற்ற முன்னுதாரணங்கள் உண்டென்பதைப் பார்த்தோம். கல்வியமைச்சல்லாத வேறு அமைச்சு தமிழைச் செம்மொழி எனப் புதிதாகப் பட்டியலிடுவது, வடமொழியைத் தேவபாடை எனவும் கல்விக்குரிய மொழி என்றும், தமிழைச் சூத்திர மொழி அல்லது தீட்டு மொழி என்றும் கல்விக்குரிய மொழி அல்லவெனவும் கூறுவதற்கு ஒப்பாகாதா?அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணை, ஐந்தாட்டுத் திட்டக் கூறு, 1986ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை, இவைதாம் தமிழைச் செம்மொழியாக்கும் அரசு அறிவிப்புக்கு அடித்தளமாக வேண்டும். மரபுவழிக் கொள்கையோ, அமைச்சரவைத் தீர்மானமோ, வேறெந்த அரசாணையுமோ, பண்பாட்டமைச்சின் அறிவிப்போ பணியோ தமிழைச் செம்மொழியென நடுவணரசு ஏற்பதற்கு உரியதாகா.2001ஆம் ஆண்டில் அமைந்த பிரதமர் தலைமையிலான இந்திய மொழிகளுக்கான தேசிய அவை கூடி, கல்வி அமைச்சின் செம்மொழிப் பட்டியலில் தமிழைச் சேர்க்குமாறும் உரிய நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறும் ஆலோசனை வழங்க, அதைக் கல்வி அமைச்சு ஏற்று நடைமுறைப்படுத்துவதே தமிழரின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்பதாக அமையும்.

Saturday, September 24, 2005

பெயர்ச்சொல் எழுத்துக்கூட்டலில் சீர்மை

செம்மொழியாகவே இருந்தது, இருப்பது, இருக்கப்போவது தமிழ்.
ஏற்புத் தகுதியால் அரசுக்குப் பெருமை சேர்த்துளது தமிழ். நிதியை அரசு ஒதுக்கலாம்; விருதுகள் வழங்கலாம்; புலமையாளரை ஊக்குவிக்கலாம்; பல்கலைக் கழகங்களில் பீடங்கள் அமைக்கலாம்; தமிழ் ஆண்டைக் கொண்டாடலாம்; இதனால் தமிழுக்கும் தமிழருக்கும் அரசுக்கும் உள்ள நெருக்கம் அதிகரிக்கலாம்.
செம்மொழி ஏற்பாணையின் செயல்பாடுகள் வளரும் பயிருக்கு உரமூட்டுவதாக அமையவேண்டும். தொடர்புக்கு வாகனமாக, வளர்ச்சிக்குக் கருவியாகச் செம்மொழித் தமிழ் தொடர வேண்டும்.
மாற்றங்களை உள்ளடக்கும் வரம்புகளைக் காலத்துக் காலம் அமைந்து வந்தமையால்தான், வாழும் மொழியாக, தமிழரை வளப்படுத்தும் மொழியாக இன்றும் தமிழ் உளது.
உலகம் முன்னெப்பொழுதும் இல்லாதளவு சுருங்கி, தொடர்புகள் நெருக்கமாகி, இணைப்புகள் எளிதானதாகி வருகின்றன. எவர் சற்றே அயர்ந்தாலும், அவரை அயர விட்டுவிட்டு மற்றவர் முன்னேறிவிடுகின்ற அளவுக்கு, அறிவியலிலும் தொழினுட்பத்திலும் வேகமான மாற்றங்கள், மனித இனத்தை அழைத்துச் செல்கின்றன.
விழிப்புள்ள சமுதாயமாக நாம் இல்லாவிடில் தமிழரின் வளர்ச்சிக்குத் தமிழ் பயன்படாது போய்விடும்.
வளர்ச்சிக்குப் பயனற்ற ஒன்றை எந்தச் சமூகம் தொடர்ந்து தாங்கிக் கொள்ளும்? உணர்வுகளும் உள்ளமும் ஈடுபட்டாலும் வயிற்றை நிரப்பாவிடின் தமிழுக்கு வாழ்வு நீடிக்குமா?
தொடர்புக்குரிய காலமிது; இணைப்புக்குரிய காலமிது. இணைப்புக்கும் தொடர்புக்கும் உரிய முதற் கருவி மொழி; மொழியைக் கொண்டு செல்வன மின் கருவிகள். மொழியில்லையேல் மின் கருவிகளால் பயனென்?
அற்ற மொழிகள் சிலவற்றைச் செம்மொழிகளாக அரசு ஏற்ற காலத்தில், வாழும் மொழியான தமிழையும் செம்மொழியாக ஏற்ற அரசு, தமிழின் வளர்ச்சிக்கு உரிய நிதி, நடைமுறை மற்றும் பாராட்டு உந்துதல்களை வழங்கவேண்டும்.
அந்த உந்துதல்களுள் ஒன்றாகப் பெயர்ச்சொல் எழுத்துக் கூட்டலில் சீர்மையை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவருவதுடன், தொடர்ச்சியாகப் புது வரவுகளுக்கான சீர்மையை வகுத்துக்கொண்டே வருகின்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.
பிறமொழிகள் தொடர்பான எடுத்துக் காட்டுகளை இங்கு கூறுவது என் கடன்.
1. வானத்தில் உள்ள நாள்களுக்கும் கோள்களுக்கும் பெயர்களுண்டு. வானத்தில் எண்ணிக்கையற்ற விண்மீன்கள் உள. இவற்றுக்குரிய பெயர்களைச் சீரான எழுத்துக்கூட்டலில் அமைக்க அனைத்துலகக் குழு ஒன்று உண்டு. உரோம வரிவடிவங்களில் அமைந்த அப் பெயர்களை இலத்தீன் சார் மொழிகள் அனைத்தும் பொதுப் பெயராகக் கொள்கின்றன. புதிதாத ஒரு விண் மீனை ஒருவர் கண்டறிந்தால் அதற்கு அவர் எழுந்தமானமாக எந்தப் பெயரையும் சூட்ட முடியாது. முதலில் அந்த விண் மீனுக்கு ஓர் எண்ணைக் கொடுப்பார். அந்த எண்ணையும், தான் விதந்துரைக்கும் பெயரையும் அனைத்துலகக் குழுவுக்கு அனுப்புவார். அந்தக் குழு அவரது விதப்புரையை விரிவாக ஆராயும். ஏற்கனவே அதே விண்மீனுக்கு வேறு பெயருண்டா? இலக்கியங்களில் குறிப்புண்டா என ஆராயும். பின்னர் அந்த விண்மீனுக்கு ஒரு பெயரைச் சூட்டும். அதையே அவ்விண்மீனுக்குரிய அனைத்துலகப் பெயராக இலத்தீன் சார் மொழிகள் ஏற்றுக்கொள்ளும்.
2. தாவரங்கள், விலங்குகளுக்குப் பெயர்கள் ஊருக்கு ஊர், வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும். யாழ்ப்பாணத்தின் நுளம்பு சென்னையில் கொசு எனப் பெயர் பெறும். கடந்த நூற்றாண்டில் இந்தச் சிக்கலை இலத்தீன் சார் மொழிகளைப் பேசும் அறிவியலாளர் உணர்ந்தனர். ஆராய்ச்சி முடிவுகளைக் கூறுவதில் குழப்பங்கள் நீடித்தன. ஒருவர் கூறியதை மற்றவரால் புரிந்து கொள்ள முடியவில்லை; இத்தனைக்கும் ஒரே வகை விலங்கை இருவரும் ஆய்ந்த காலம். வட்டார, மொழிக்குழு வேறுபாடுகளுக்கு அப்பால் எழுத்துக்கூட்டலில் சீர்மையுடைய இலத்தீன் பெயர்கள், அதுவும் ஒரு விலங்குக்கோ ஒரு தாவரத்துக்கோ இரு சொல் கொண்ட பெயரைச் சூட்டத் தொடங்கினர். இதற்காக அனைத்துலகக் குழுக்களை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அமைத்தனர். விலங்குப் பெயர்களுக்கான அனைத்துலகத் தராரதரக் குழு இன்றும் முறையாகச் செயற்படுகிறது. அதே போலத் தாவரப் பெயர்களுக்கான அனைத்துலகத் தராரதரக் குழு இன்றும் முறையாகச் செயற்படுகிறது. இலத்தீன் மொழி சார் நாடுகளுக்கிடையே மோதல்கள் முற்றும், போர்கள் நிகழும், ஆனாலும் இந்தத் தராதரப் பெயர்ச் சொற் குழுக்களின் செயற்பாட்டிற்கோ, நடைமுறைக்கோ பங்கம் ஏற்படாது.
3. ஊர்கள், பேரூர்கள், நகரங்கள் யாவுக்கும் பெயர்கள் உண்டு. குழப்பமற்ற எழுத்துக் கூட்டல் இருப்பதே வளர்ச்சிக்கு வழி எனக் கண்ட உலக நாடுகள், இடப் பெயர் எழுத்துக்கூட்டல் சீர்மைக்காக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பாக ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்புக்குத் தலைமையகம் ஒன்று இருப்பினும், மண்டல அமைப்பகள் பல உள. இந்த மண்டல அமைப்புகளுக்கு ஒவ்வொரு நாட்டிலும் நாட்டமைப்பு உண்டு. ஒவ்வாரு இடப்பெயரின் உரோம வரிவடிவ எழுத்துக்கூட்டல் இதுதான் என அறிவிப்பது இந்த அமைப்பின் பணிகளுள் ஒன்று. பெயர்களை மாற்றும் உரிமை உள்ளூர் மக்களுக்கே உண்டு என்பதை ஏற்கும் இவ்வமைப்பு, அவ்வவ் ஊர்களின் உரோம வரிவடிவ எழுத்துக்கூட்டல் எப்படி அமையும் என்பதை அவ்வவ் மக்களிடம் கேட்டு உறுதி செய்து, அவர்களுக்கும் உலகுக்கும் அறிவிக்கும் மாபெரும் பணியைச் செய்து வருகிறது.
எங்கெல்லாம் பெயர்ச்சொல்லின் எழுத்துக்கூட்டல் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதோ அங்கெல்லாம் தராதரக் குழுக்களை அமைத்தலும், சீர்மையான பெயர்ச் சொல்லை அமைத்தலும் வளரும் நாடுகளின் போக்காக உள்ளன. இன்று நேற்றல்ல, கடந்த நூறாண்டுகளுக்கு மேலாகவே இந்தப் போக்கு, இலத்தீன் மொழி சார் நாடுகளிடையே உண்டு.
யப்பானியரின் தொழினுட்ப அறிவியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் யப்பானிய மொழியே. ஐரோப்பாவின் அறிவியல் கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் யப்பானிலும் மீட்டுருவாக்கினர். ஒவ்வொரு பொறியையும் யப்பானியரே இரட்டிக்கத் தொடங்கினர். இதற்காக ஐரோப்பிய அறிவியல் - தொழினுட்ப அறிக்கைகளை யப்பானிய மொழிக்கு மாற்றினர். உடனுக்குடன் மாற்றுவதற்காக துறைதொறும் அமைப்புகளை உருவாக்கினர். அத்தைகைய அமைப்புகளுள் ஒன்றே பெயர்ச் சொல் எழுத்துக்கூட்டலில் சீர்மை அமைப்பு.
கொரியா, சீனம் போன்ற ஆசிய நாடுகள் தத்தம் மொழிகளிலே வளர்ச்சி அடையப் பெயர்ச்சொல் எழுத்துக்கூட்டலில் சீர்மை அமைப்புகளை உருவாக்கி வளர்ந்து வருகின்றனர்.
அற்ற மொழிகள் இத்தகைய வரப்புக் கட்டுகளை அமைக்காததாலன்றோ அற்றன. வளரும் மொழிகள் இத்தகைய வரப்புக் கட்டுகளை அமைத்ததால், தொடர்ந்தும் அமைத்து வருவதால் செழிப்புற்று, உலகளாவி வளர்வதுடன், அயர்ந்த நிலையிலுள்ள மொழிகளையும் அற்ற மொழிகளாக்க முனைகின்றன. தமிழர் இந்த வரப்புக் கட்டுதலை எடுத்துநோக்காது அயர்ந்துளர். வளரும் மொழிகள் ஒருநூற்றாண்டு காலமாக இந்த உத்தியைக் கையாண்டு வருவதைத் தெரிந்த அறிவியலாளரான தமிழர், அந்த உத்திகளைத் தமிழ் மொழியியலாளருக்கு இதுவரை எடுத்துக் கூறாதமையை என் சொல்வேன்?
பெயர்ச்சொல் எழுத்துக்கூட்டலின் சீர்மையில் முன் அநுபவம் உள்ள ஐநா-கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தை இந்திய அரசு அணுகி, அவர்கள் மூலமாக, உலகில் தமிழர் வாழும் நாடுகளின் பேராளர்களை அழைத்து, தமிழ்ப் பெயர்ச்சொல் எழுத்துக்கூட்டலின் சீர்மைப் பீடம் அமைப்பதும், அப்பீடம் தொடர்ச்சியாகத் தொகுத்து வழங்கும் பெயர்ச்சொல் பட்டியலையே எழுத்துக்கூட்டலுக்கான அறுதியான முடிவாகத் தமிழர் எங்கிருந்தாலும் எக்காலத்திலும் ஏற்று, அவ்வவ் அரசுகள் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவருவதும், வாழும் வளரும் செம்மொழியாகத் தமிழ் மொழி தொடர வழி வகுக்கும்.
செம்மொழி அறிவிப்பை அடுத்து இந்திய அரசு பல்வேறு செயல் திட்டங்களை தமிழ் மொழிக்காக நடைமுறைக்குக் கொண்டுவர உளது. அவற்றுள் ஒன்றாக, பெயர்ச்சொல் எழுத்துக்கூட்டலில் சீர்மைப் பீடம் அமைத்து, அதைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் திட்டத்தையும் அரசு உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு நாம் ஆவன செய்வோமாக.